புதுச்சேரி:
கொரோனா பேரிடர் காலத்தில் உயிரைப் பணையம் வைத்துப் பணியாற்றிய சுகாதார ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, பாரதப் பிரதமர் புதுச்சேரிக்கு வரும் பொழுது கருப்பு ஆடை அணிந்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என தேசிய மக்கள் முன்னணி (DMM) தலைவர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் முன்வைத்த முக்கியக் கருத்துக்கள் வருமாறு,
“உலகமே அச்சத்தில் நடுங்கிய கொரோனா காலத்தில், உயிருக்கு அஞ்சாமல் மருத்துவமனைகளில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் மற்றும் எக்ஸ்ரே டெக்னீசியன்களை தற்போது புதுச்சேரி அரசு பணியில் இருந்து நீக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. முறையான தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களை, ‘புறவாசல் நியமனம்’ எனக் கூறி ஒதுக்குவது இவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.”
“100 நாட்களுக்கு மேல் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளன. அண்டை மாநிலமான தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இவர்களைப் பணி நிரந்தரம் செய்துள்ளன. ஆனால், புதுச்சேரி அரசு நிதி நிலையை காரணம் காட்டி இவர்களைத் தெருவில் நிறுத்தியுள்ளது.”
“மத்திய அரசின் பரிந்துரையின் படி சுகாதாரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை இந்த ஊழியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி, பாரதப் பிரதமர் அவர்கள் புதுச்சேரிக்கு வருகை தரும் நாளில், தேசிய மக்கள் முன்னணி சார்பில் நாங்கள் அனைவரும் கருப்பு நிற ஆடை அணிந்து எங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்வோம்.”
இந்தச் சந்திப்பின் போது, பாதிக்கப்பட்ட கொரோனா கால ஊழியர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த அறிவிப்பு புதுச்சேரி அரசியல் மற்றும் சுகாதாரத் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் சுவாமிநாதன் அவர்கள் தலைமை தாங்கினார், பொதுச் செயலாளர் இன்னாசி ராக், துணைத் தலைவர்கள் பானுமதி, ஜெபின், செயலாளர்கள் டேவிட் ஜோசப், தமிழ் செல்வி, நிர்வாகிகள் இவோன் கிறிஸ்டின், விமல்ராஜ், வினோலினா, தனபிரதிக்ஷா, பரமேஷ்வரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் பழங்குடியினர் மக்கள் பாதுகாப்பு இயக்க செயலாளர் ஏகாம்பரம், சுசி கம்யூனிஸ்ட் ராஜா, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் டி.வி.நகர் ராஜா, தலைவர் பிரகாஷ், அண்ணா பேரவை சிவ.இளங்கோ, தலித் பேந்தர்ஸ் ஆப் இந்தியா அறிவுமணி, திராவிடர் கழகம் அன்பரசன், திராவிடர் விடுதலைக் கழகம் சிவக்குமார், தேநீர் சந்திப்பு குழு சக்திவேல் பட்டுரோஸ், பீ போல்ட் பஷீர், சிபிஜ எம் எல் சகாயம், வள்ளலார் பேரவை செல்வகுமார், தமிழர் களம் அழகர், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் மதுரை நாயகம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!