June 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு கல்குவாரியில் சட்டவிரோத கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு

ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கல்குவாரியில், மற்ற பங்குதாரர்களின் அனுமதியின்றி சட்டவிரோதமாக அபாயகரமான கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. வில்லரசம்பட்டி மற்றும் தொட்டம்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி, தட்சணாமூர்த்தி மற்றும் திருமலைச்சாமி ஆகியோர் இந்த மனுவை அளித்துள்ளனர். இவர்களுக்குச் சொந்தமான கல்குவாரியில், மற்றொரு பங்குதாரரான கவுரிசங்கர் என்பவர் எவ்வித அனுமதியும் இன்றி சாயக்கழிவுகள், மருத்துவக் கழிவுகள், திடக்கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகளைப் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் மூலம் தொடர்ந்து கொட்டி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து நேரில் கேட்டதற்கு அவர் ஆவேசமாகப் பதிலளித்ததாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே அங்கு கொட்டப்பட்ட குப்பைகளால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், பலமுறை சிறிய அளவிலான தீ விபத்துகளும் நடந்துள்ளன. மீண்டும் தீ விபத்து ஏற்பட்டால், குவாரியைச் சுற்றி வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்குப் பேராபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. மேலும், தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுப்புறச் சூழல் கடுமையாக மாசுபடுவதோடு, நிலத்தடி நீர் முற்றிலும் பாழாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளதுடன், மருத்துவ மற்றும் அபாயகரமான கழிவுகளால் அப்பகுதியில் தொற்றுநோய்கள் பரவி, பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதுதொடர்பாக, நேற்று இரவு 10:00 மணியளவில் அத்துமீறி குப்பைகளை ஏற்றி வந்த ‘ஸ்ரீ ஆதித்யா ஏஜென்ஸி’ என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான TN56 C3771 எண் கொண்ட வாகனத்தை மனுதாரர்கள் தடுத்து நிறுத்திப் பிடித்து வைத்துள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, கல்குவாரியில் கழிவுகள் கொட்டப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வரும் கவுரிசங்கர் மற்றும் அதற்குத் துணையாக இருப்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு, கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, இனி எந்தவொரு கழிவும் குவாரிக்குள் வராதவாறு நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை மூலம் நேரடி ஆய்வு மேற்கொண்டு நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் உடல்நலன் மற்றும் வருங்கால தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு, இம்மனுவை அவசரமாகப் பரிசீலித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அந்த மனுவில் பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.