February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் அறிக்கை:-

போராட்டம் நடத்தி வரும் ஒப்பந்த ஆசிரியர்கள் ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழக தலைவருடன் சந்திப்பு.
போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் படி கேட்டுக் கொண்டனர்.

புதுவை கல்வித்துறையின் வாயில் முன்பு, பணி நிரந்தரம் செய்யக்கோரி காலவரையற்ற நிலையில் போராடும் ஒப்பந்த ஆசிரியர்கள் என்னை நேரில் சந்தித்து அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். நானும் அவர்களுக்கு மாணவர்கள் நலனையும், ஆசிரியர்கள் நலனையும் கருத்தில் கொண்டு , ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம் அவர்களின் போராட்டத்திற்கு பக்கக்கபலமாக நின்று முழு ஆதரவு அளிக்கும் என்று உறுதி அளித்துள்ளேன்.

புதுவை அரசு , பள்ளி மாணவர்களை உயர்வு நிலைக்கு கொண்டு வர உழைக்கும் ஆசிரியர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்க இந்த என் ஆர் பிஜேபி அரசு எந்த ஒரு முயற்சியும் எடுக்காதது கண்டனத்துக்குரிய செயலாகும். அதனால் இன்று கல்வித்துறை வாயிலில் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் 292 பேர் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் , பட்டதாரி மொழி ஆசிரியர்கள் , பால சேவக ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி அவர்கள் சட்டசபை முன்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்களை அழைத்து பணி நீட்டிப்பு மற்றும் பணி நிரந்தரம் விரைவில் செய்யப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் முதல்வர் ரங்கசாமி அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அவர்களை அலைக்கழித்த காரணத்தினால் இன்று காலவரையற்ற போராட்டத்திற்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள்.
இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
புதுவை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலையில் தான் இரட்டை என்ஜின் ஆட்சி உள்ளது. இந்த அரசு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்வாதாரம் சீரழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது .

சட்டமன்றத்தில் இருக்கும் 30 சட்டமன்ற உறுப்பினர்களும் ஏதோ ஒரு ஆசிரியர்களால் உருவாக்கப் பட்டவர்கள் என்பதை மறுக்க முடியாது. அப்படிப்பட்ட புனிதமான ஆசிரியர் வர்க்கத்தை வஞ்சிப்பது பாவ செயல் இல்லையா.?.

தற்போது போராட்டம் நடத்தி வரும் 292 ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசியர்கள் யாரும் கொல்லைபுறமாக பணியமர்த்த படவில்லை . முறையாக அரசு நடை முறை சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு தான் ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டார்கள்.
இதே கல்வித்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப் பட்டவர்கள் பணி நிரந்தரம் செய்யப் பட்டுள்ளார்கள். அப்படியிருக்க இந்த 292 ஆசிரியர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்ய தயங்குவது ஏன்.?.

முதல்வர் ரங்கசாமி அவர்கள் , இந்த விஷயத்தில் தலையிட்டு ஒப்பந்த ஆசிரியர்களின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இல்லையேல் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp