மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.11.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் .கே.என்.நேரு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் இன்று (07.03.2026) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்கு.சின்னப்பா ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்ஆகியோர் கலந்துகொண்டார்.
புதிய பேருந்து நிலையத்தினை திறந்து வைத்த பின்னர் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு, முதலமைச்சர் அவர்கள் ஆட்சியில் அரியலூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு இன்றையதினம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இப்பகுதிக்கு வருகை தந்த மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் பழைய பேருந்து நிலையத்தினை பார்வையிட்ட பின்னர் உடனடியாக புதியதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு அதற்கான நிதி ஓதுக்கீடு செய்து இன்றையதினம் சிறப்புமிகு பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் அமைப்பதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும் அதனை சரிசெய்து, பணிகளை முடிவுற செய்து மிகச்சிறப்பான முறையில் பேருந்து நிலையத்தினை அமைத்து கொடுத்துள்ளார்கள். மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை பலமுறை நேரடியாக ஆய்வு செய்து, அறிவுரைகளை வழங்கியதுடன், அவர்களுடைய நேரடி மேற்பார்வையில் இப்பேருந்து நிலையம் அமையப் பெற்றுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் கடந்த வாரம் இலால்குடிக்கு வருகை தந்து அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தினை திறந்த வைத்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்களை அழைத்து அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு அங்கு பிரச்சனைகளை உடனடியாக தீர்வு காண்பதற்கு வேண்டிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இப்பேருந்து நிலையம் அமைவதற்கு தனது முழு பங்களிப்பையும் வழங்கி திறந்து வைத்துள்ளார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்த அரியலூர் பகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை வழங்கியதை போன்றே தற்போதும் அரியலூர் மாவட்டத்தினை தனது சொந்த மாவட்டமாக நினைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அரியலூர் நகராட்சியில் உள்ள சாலைகள் அனைத்தும் தார் சாலைகளாகவும், சிமெண்ட் சாலைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளது. புதிய மார்க்கெட் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அரியலூர் மாவட்டத்தை அமைத்து கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை ஏற்படுத்தியும், புறவழிச் சாலைகள் அமைத்து நகரம் என்ற அந்தஸ்து வருவதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் தான் காரணமாகும். அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் அரியலூர் மாவட்டம் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை கண்டுள்ளது. எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் புதியதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது தான் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பாகும். குறுகிய அளவில் இருந்த பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் மொத்தம் 138 நகராட்சிகள் இருந்தது. தற்போது தமிழ்நாட்டில் 145 நகராட்சிகளாக உயர்ந்திருக்கிறது. 15 மாநகராட்சிகள் இருந்தன. இப்பொழுது 25 மாநகராட்சிகளாக உயர்ந்திருக்கிறது. ஏறத்தாழ 479 பேரூராட்சிகள் இருக்கிறது. கிராமத்தினை விட நகரத்தில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதன் காரணமாக நகரத்தில் அதற்கான வசதிகளை பொதுமக்களுக்கு கொண்டுவர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முடிவு செய்து இந்த இலாக்காவிற்கு எல்லா நகரங்களிலும் புதிய பேருந்து நிலையங்கள், எல்லா நகரங்களிலும் மார்கெட் கட்டப்பட்டுள்ளன. அடிப்படை கழிவறை வசதி, மழைநீர் வடிகால்கள், சாலைகள் என மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் நகராட்சிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் அரியலூர் நகராட்சியில் பேருந்து நிலையம் அமைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் 1971 ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சர். அதற்கு பின்னர் சில அமைச்சர்கள் போக்குவரத்து துறை அமைச்சர்களாக இருந்திருக்கிறோம். அதனை தொடர்ந்து இன்றைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் சிறப்பான முறையில் பணிகளை மேற்கொண்டு தாழ்தளப் பேருந்து, மின்சாரப் பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்கள். திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் அமைச்சர் பதவியினை வழங்கி வருகிறார்கள். மின்துறை என்பது மக்களுக்கானது. எவ்வளவு குறைவான கட்டணத்தில் வழங்க வேண்டுமோ அத்தகைய அளவில் வழங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை பணிகளை சிறப்பாக அமைச்சர் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினை உருவாக்கினார்கள். அப்பொழுது ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டது. அதற்கு பிறகு உள்ளுர் பகுதிகளில் நீர் எடுக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் மூலம் வழங்கப்பட்டது. பின்னர் ஆறுகளில் கிணறுகள் அமைத்து அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும் வரை தமிழ்நாட்டில் இருக்கின்ற 4 கோடியே 28 இலட்சம் மக்களுக்கு தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. கடந்த 5 ஆண்டு காலத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சியில் 1 கோடியே 30 இலட்சம் நபர்களுக்கு கூடுதலாகவும், தற்போது 1 கோடியே 30 பேருக்கு கூடுதலாகவும், மேலும் 1 கோடி நபர்களுக்கு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
50 ஆண்டுகள் ஆன பிறகு குடிநீர் குழாய்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. அதனை சீரமைத்து குடிநீரை அதிகளவில் வழங்குவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், நாகபட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட எல்லா பகுதிகளுக்கும் பெரிய நகரங்களில் தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றால் 7 கோடியே 80 இலட்சம் வீடு கட்டி தரப்படும் என அறிவித்துள்ளார்கள். நீண்ட காலம் பட்டாக்கள் கிடைக்கப்பெறாவர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பட்டாக்கள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் புதிய வீடுகளையும் கட்டி தந்துள்ளார்கள். 2 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 1 இலட்சம் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. திராவிட மாடல் ஆட்சி மிகச்சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இப்பேருந்து நிலையமானது கோ.சிவப்பெருமாள் பேருந்து நிலையம் என்று இருந்தது. மீண்டும் கோ.சிவப்பெருமாள் பேருந்து நிலையமாகவே செயல்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் ஆலோசித்து அவை மேற்கொள்ளப்படும். எனவே அனைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் நகர்மன்றத் தலைவர் திருமதி.சாந்தி கலைவாணன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தஞ்சாவூர் திருமதி.விஜயலெட்சுமி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமி, நகராட்சி பொறியாளர் (பொ) த.ராஜகோபாலன், அரியலூர் வட்டாட்சியர் திருமதி.தேவகி. அரியலூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள், இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!