July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாநில நெடுஞ்சாலையில் புளியமரம் விழுந்து விபத்து: வாலிபர் படுகாயம் – நெடுஞ்சாலைத்துறை அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மஞ்சமேடு கிராமத்தில், தர்மபுரி – திருப்பத்தூர் மாநில நெடுஞ்சாலையில் சாலையோர புளியமரம் ஒன்று பலத்த காற்று காரணமாக திடீரென வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

இந்த விபத்தின் போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தீபக் (45) என்ற வாலிபர் மீது மரம் விழுந்தது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் அவரது இருசக்கர வாகனம் மரத்திற்கு அடியில் சிக்கி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது.

தர்மபுரி – திருப்பத்தூர் மாநில நெடுஞ்சாலையானது, சென்னை செல்லக்கூடிய பிரதான சாலை என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்த காணப்படும். மரம் விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர், மரங்களை வெட்டி அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான இந்த புளியமரத்தின் அடிப்பகுதி மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும், அது எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதாகவும் மஞ்சமேடு பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே புகைப்படத்துடன் நெடுஞ்சாலைத்துறைக்கு புகார் அளித்துள்ளார். “மரம் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து அதிகாரிகளுக்கு முறைப்படி புகார் அளித்தும், நெடுஞ்சாலைத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வந்துள்ளனர். அதிகாரிகளின் இந்த மந்தப்போக்கே இன்றைய விபத்துக்கு முக்கிய காரணம்” என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக, வாகன போக்குவரத்து சற்று குறைவாக இருந்த மதிய நேரத்தில் இந்த மரம் விழுந்ததால் பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பெரிய அளவிலான ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஆபத்தான மரங்களை அகற்றக் கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.