கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த பகுதியில் தொடர்ந்து நடைபெறும் விபத்துகளுக்கு குறுகலான சாலைகளே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மணிமாறன் (வயது 28). இவர் சந்தூரில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு மணிமாறன் தனது பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தில் போச்சம்பள்ளியிலிருந்து சந்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வாகனம் வெப்பலம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மணிமாறனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வெளியேறியது. விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர், மணிமாறனை மீட்டு முதலுதவிக்காக போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, இன்று காலை மணிமாறன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போச்சம்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து சமூக ஆர்வலர் மணி அவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்தப் பகுதியில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது வேதனையளிக்கிறது. மக்களின் உயிரைப் பாதுகாக்க அரசு உடனடியாக போச்சம்பள்ளி – சந்தூர் சாலையை விரிவுபடுத்தி தரமான சாலை அமைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!