June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பள்ளி மாணவர்களுக்கு ரூ.5,மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம்.

சேலத்தில் தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் பயன்பாட்டிற்காக தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வரும் சூழலில்,ஒரு மினிபேருந்தில் எழுதப்பட்டிருந்த இரண்டு வரிகள்,நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

`ஶ்ரீ கருடாழ்வார்’ என்று பெயரிடப்பட்டிருந்த அந்த மினி பேருந்தில் ₹17 வரை பயணக் கட்டணமாக வசூலிக்கப்படும். அந்தப் பேருந்தில் பள்ளி மாணவர்களுக்கு ₹5 மட்டும் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் எனவும் எழுதியிருந்தது. மகளிர் விடியல் பயணம் திட்டத்தைப்போலவே… இந்த மினிபேருந்தின் சலுகையினாலும் பல்வேறு மக்கள் பலனடைந்திருக்கிறார்கள். மாணவர்கள் பள்ளிச் சீருடையுடன் பள்ளி தொடர்புடைய பயணங்களுக்கு எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்குவதற்கு வெறும் ₹5 மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கியுள்ள மாற்றுத்திறனாளி அட்டை அடிப்படையில், அந்தப் பேருந்தில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ள இயலும்.

தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை
இது குறித்து அப்பேருந்து நடத்துனரிடம் கேட்கும் போது,

“விஷ்ணு டிராவல்ஸ் அனைத்து பேருந்துகளிலும் இந்தச் சலுகை பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு சீருடையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மாற்றுத்திறனாளி அட்டையும் இருந்தால் மக்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்தலாம். சில நேரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை இல்லையென்றாலும்கூட இந்தச் சலுகையை அளிக்கிறோம்” என்கிறார்.

இந்தச் சலுகைப் பற்றி பொதுமக்கள் கூறும்போது,

“சேலம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சித்தர் கோயில் -கொல்லப்பட்டி- ஜங்ஷன் – சிவராஜ் கல்லூரி – தண்ணீர்த்தொட்டி வரையிலான வழித்தடத்தில் இயங்கி வரும் மினி பேருந்தில் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்குப் பெரிதும் உதவிகரமான செயலாகத்தான் நாங்கள் இதைப் பார்க்கின்றோம்.

பள்ளி நேரங்களில் கூட்டமான பேருந்துகளில் அலைக்கழிக்கப்படும் நிலையில் காலை… மாலை நேரத்தில் எங்கள் பிள்ளைகள் சுமுகமான பயணம் மேற்கொள்ள இச்சலுகை உதவியாக உள்ளது. தனியார் மினி பேருந்து என்பதால் நடத்துடனர்களின் அன்பான கண்டிப்பும், மாணவர்கள் மீதான தனி கவனமும் கருடாழ்வார் மினி பேருந்தின் மீது மதிப்பைக் கூட்டுகிறது. இந்தப் பேருந்தில் தொடர்ந்து பயணிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது ” என்கின்றனர்.

தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை
இது குறித்து விஷ்ணு டிராவல்ஸ் உரிமையாளர் விஸ்வநாதனிடம் பேசும்போது,

“இந்தச் சலுகை 1996-ல் பேருந்து இயக்க ஆரம்பித்தது முதலே உள்ளது. அன்றைக்கு பள்ளி மாணவர்களுக்குப் பயணக் கட்டணமாக இரண்டு ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணமாகவும் அறிவித்து செயல்படுத்தி வந்தோம். தற்போது விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடி ரூ.5 ஆக உயர்த்தி உள்ளோம். சுமார் 29 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த நடைமுறை உள்ளது.

தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை
இந்தப் பேருந்தில் குறைவான வருமானமே வரும் என்பதால்,மற்ற வழித்தட மினி பேருந்து வழி அதனை சரிகட்ட முயற்சிப்போம். என்றைக்கும் இந்தச் சலுகையை நாங்கள் சுமையாக கருதியதே இல்லை. மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையாகவே செய்து வருகிறோம்” எனக் கூறி மனம் நெகிழ்கிறார்.