புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிங்கப்பூர் தமிழறிஞர் துரை.முத்துக்கிருஷ்ணன் எழுதிய குறளறனும் மனு முரணும் நூல் வெளியீடு….
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிங்கப்பூர் தமிழறிஞர் துரை.முத்துகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “குறளறனும் மனுமுரணும்” எனும் திருக்குறள் ஆய்வு நூல் வெளியீட்டு விழா புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ச் சங்கச் செயலர் கல்விச் செம்மல் சீனு.மோகன்தாசு வரவேற்புரை ஆற்றினார். புதுவைத் தமிழ்ச் சங்க ஆட்சிக் குழுவினர் முன்னிலை வகித்தனர்.இவ்விழாவில் “குறளறனும் மனுமுரணும்” எனும் நூலினை மாண்புமிகு அமைச்சர் வே.பொ. சிவக்கோழுந்து அவர்கள் வெளியிட புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பேசியதாவது, புதுவையில் தமிழை உலகெங்கும் கொண்டு செல்கின்ற பணியினை புதுவைத் தமிழ்ச் சங்கமும்,கம்பன் கழகமும் இணைந்து தொடர்ந்து செய்து வருவது மகிழ்ச்சிக்குரியதாகும்.அந்த வகையில் அயல் நாடுகளில் இருந்து வருகின்ற தமிழறிஞர்களை வரவேற்று அவர்களை பாராட்டி புதுவைத் தமிழ்ச் சங்கம் சிறப்பு செய்வதை நான் மன மகிழ்வோடு பாராட்டுகின்றேன் என்று கூறினார்.இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் அருளியார் அவர்கள் கூறுகையில், குறளும் தமிழும் இணைப்பிரியாத ஒன்று என்றும், நாகம் என்ற ஒரு சொல்லில் உலகளாவிய தமிழின் வேர்ச் சொற்களையும், நாகத்தைப் பற்றிய உலகின் பல்வேறு நாடுகளை பற்றிய சிறப்பையும் குறளில் உள்ள அறண்களையும் தெள்ளத் தெளிவாகவும், பரிமேலழகர் காலம் தொட்டு இன்றைய காலம் வரை எவ்வாறு எழுதப்பட்டு வருகிறது என்பதனை தன்னுடைய ஆய்வு முறையில் மிகத் தெளிவாக வலியுறுத்தி பேசினார்.இவ்விழாவில் நூலாசிரியர் துரை.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு “குறள்நெறிச் செம்மல்” எனும் விருதினை மாண்புமிகு அமைச்சர் வே.பொ. சிவக்கொழுந்து வழங்கி பாராட்டினார். நூலாசிரியர் துரை.முத்துகிருஷ்ணன் சிங்கப்பூரில் தமிழும், தமிழர்களும் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், சிங்கப்பூர் அரசு தமிழுக்கும்,தமிழ் மொழிக்கும் எவ்வாறு பல்வேறு வகையில் பேருதவி செய்து வருகிறது என்றும், தமிழுக்காக ஒரு மாதத்தை ஒதுக்கி அரசு விழாவாக சிங்கப்பூர் அரசு கொண்டாடி வருவதை இன்று உலகமே போற்றி பாராட்டுகின்றது என்றும் குறளில் உள்ள மனுநீதி அறத்தினை ஒன்றுபடுத்தி மிகத் தெளிவாக ஏற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் தமிழ்ச் சங்கப் பொருளர் மு. அருள்செல்வம்,துணைத் தலைவர் ப.திருநாவுக்கரசு,செந்தமிழ்ச்செம்மல் சீணு.வேணுகோபால், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள்,மாணவர்கள் என பலரும் திரளாக பங்கேற்றனர். முடிவில் முனைவர் இரா.அருள்ராஜ் நன்றி கூறினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்