July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பள்ளி மாணவர்களின் நலன் கருதி புதிய வழித்தட மினி பேருந்து சேவை தொடக்கம்மணப்பாறை எம்.எல்.ஏ. ரா. கதிரவன் தொடங்கி வைத்தார்

மணப்பாறை, ஜூலை 10:

திருச்சி மாவட்டம், நடுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில், புதுவாடி – குமரம்பட்டி – கல்பட்டி வழியாக நடுப்பட்டி வரை இயக்கப்படும் புதிய வழித்தட மினி பேருந்து சேவையை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் இன்று தொடங்கி வைத்தார்.

நடுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பலர் தினமும் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்குச் செல்லும் அவல நிலை நீண்ட காலமாக இருந்து வந்தது. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வந்ததுடன், பெற்றோர்களும் போதிய போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவனை நேரில் சந்தித்து, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக பேருந்து சேவை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த எம்.எல்.ஏ. ரா. கதிரவன், சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பெரிய பேருந்துகள் இயக்க முடியாத சாலை அமைப்பு மற்றும் நிலைமையை கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலனை முன்னிறுத்தி புதிய வழித்தடத்தில் மினி பேருந்தை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்பேரில், புதுவாடி – குமரம்பட்டி – கல்பட்டி – நடுப்பட்டி வழியாக பள்ளி மாணவ, மாணவிகள் காலை பள்ளிக்குச் செல்வதற்கும், மாலை வீடு திரும்புவதற்கும் வசதியாக புதிய மினி பேருந்து சேவை இன்று முதல் இயக்கப்பட்டது.

புதிய பேருந்து சேவையை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் மாணவர்கள் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் பள்ளிக்குச் சென்று வருவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய பேருந்து சேவையை வரவேற்றனர்.