July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேசிய சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டி; முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார்

புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மற்றும் இந்திய ரோலர் ஸ்கேட்டிங் சம்மேளனம் இணைந்து, தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியை ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை புதுச்சேரியில் நடத்துகிறது. இதனை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் நிறுவனர் திருவேங்கடம் மற்றும் தலைவர் பழனி ஆகியோர் பேசும்போது:

“புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மற்றும் இந்திய ரோலர் ஸ்கேட்டிங் சம்மேளனம் இணைந்து, 13-வது ரேங்கிங் ஓபன் நேஷனல் ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தேசிய அளவிலான போட்டியை, வருகின்ற ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஸ்கேட்டிங் ரிங்கில் நடத்த உள்ளோம்.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் 8 வயது வரை, 8 முதல் 10 வயது வரை, 10 முதல் 12 வயது வரை, 12 முதல் 15 வயது வரை, 15 முதல் 18 வயது வரை மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோர் என்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 1500 ஸ்கேட்டர்கள் பங்கேற்க உள்ளனர். இது நாட்டின் மிகப்பெரிய ஸ்கேட்டிங் நிகழ்வுகளில் ஒன்றாகும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குப் பெருமை சேர்க்கும் இந்தப் போட்டியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைப்பார்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்தப் போட்டியின் அதிகாரப்பூர்வ லோகோவை புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் நிர்வாகிகள் வெளியிட்டனர். செய்தியாளர் சந்திப்பின் போது, புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷனின் பொதுச் செயலாளர் தாமஸ், பொருளாளர் செந்தில் குமார், துணைத் தலைவர் தனஜெயன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.