June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

​சொந்த ஊருக்குள் நுழையத் தடை: வீராம்பட்டினம் பஞ்சாயத்து தலைவரின் அராஜகத்தை கண்டித்து வழக்கறிஞர் லெனின் புகார்!

​புதுச்சேரி:

புதுச்சேரி வீராம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண், தனது சொந்த ஊருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு ஊர் மக்கள் முன்னிலையில் அவதூறு பரப்பிய பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வழக்கறிஞர் லெனின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

​வீராம்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த பிரியங்கா, பூம்புகாரைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்திருந்தார். அவரது கணவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட காரணத்தினால், பிரியங்கா தனது சொந்த ஊரான வீராம்பட்டினத்திற்குத் திரும்பியுள்ளார்.
​அப்போது, தன்னைத்தானே பஞ்சாயத்து தலைவர் என்று கூறிக்கொள்ளும் விஸ்வநாதன் என்பவர், பிரியங்காவை ஊருக்குள் அனுமதிக்க மறுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த 12/01/2026 அன்று ஊர் முழுவதும் ஒலிபெருக்கி மூலம் பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறாகப் பிரச்சாரம் செய்துள்ளார்.

​தனிப்பட்ட விவகாரங்களில் பஞ்சாயத்துகள் தலையிடக்கூடாது என்ற உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி, கடந்த 13/01/2026 அன்று சுமார் 700 பேர் முன்னிலையில் பிரியங்காவின் வாழ்க்கையை விசாரிக்கப் போவதாக விஸ்வநாதன் அறிவித்துள்ளார். பொதுமக்களின் அறிவுரைகளையும் மீறி அவர் இவ்வாறு செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

​இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பெரும் பண பலம் இருப்பதாக வழக்கறிஞர் லெனின் குற்றம் சாட்டியுள்ளார்.
​பூம்புகார் கிராமத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகப் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுவதாகவும்,
​இதில் ஒரு பங்கு விஸ்வநாதனுக்குச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
​இதன் காரணமாகவே, பூம்புகார் தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, சொந்த ஊர் பெண்ணைப் பழிவாங்கும் நோக்கில் அவர் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
​​இது தொடர்பாக முதலமைச்சர், ஆளுநர் மற்றும் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், கடந்த 1-ம் தேதி பிரியங்கா மற்றும் அவரது தரப்பினர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதுகுறித்து 100-க்கு அழைத்து புகார் அளித்தும், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்யத் தயங்கியுள்ளனர்.

​தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய வழக்கறிஞர் லெனின், “நீதிபதி அவர்களிடம் அனைத்து ஆதாரங்களையும் தெளிவாகச் சமர்ப்பித்துள்ளோம். காவல்துறையின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணிற்குச் சாதகமான, நல்ல நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” எனத் தெரிவித்தார்.