சங்கராபுரம் பிப் 03
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டாரத்தில் உள்ள பொதுமக்களின் சுகாதார தேவைகளை முன்னிட்டு, மூரார்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
“நலன் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமில், சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை சேவைகளை பெற்றனர்.
இந்த முகாமில் பொது மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நலம், குழந்தைகள் நலம், கண் சிகிச்சை, பல் மருத்துவம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை, தோல் நோய், காது-மூக்கு-தொண்டை சிகிச்சை உள்ளிட்ட 17 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
முகாமை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் நேரில் பார்வையிட்டு, சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார். அப்போது அவர் பேசுகையில்,
“பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அரசு தொடர்ச்சியாக மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. கிராமப்புற மக்களுக்கு வீடு தேடி சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்” என தெரிவித்தார்.
இந்த மருத்துவ முகாமில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார துறையினர் பங்கேற்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்