நில ஆக்கிரமிப்பு, மிரட்டலால் மனமுடைந்து தற்கொலை முயற்சி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் நில பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் மாற்றுத்திறனாளி விவசாயி ஒருவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மாதர்சனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், மாற்றுத்திறனாளி விவசாயி. இவருக்குச் சொந்தமான 20 சென்ட் நிலத்தை அளந்து கொடுக்கக் கோரி கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
ஆனால் நிலத்தை அளந்து கொடுப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, சென்னையில் வசிக்கும் திம்மையா என்பவரின் மகன்களான நவீன் மற்றும் சித்தன் ஆகியோர் வெங்கடேசனின் நிலத்தை ஆக்கிரமித்ததாகவும், ஆட்களை வைத்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
நில ஆக்கிரமிப்பு மற்றும் மிரட்டலால் மனமுடைந்த வெங்கடேசன் இன்று மீண்டும் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மனுவை அளித்துவிட்டு வெளியே வந்த அவர், அதிகாரிகளின் அலட்சியத்தால் தீர்வு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் திடீரென தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீர்கள் உடனடியாக செயல்பட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பலத்த தீக்காயமடைந்த வெங்கடேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் மாற்றுத்திறனாளி விவசாயி ஆட்சியர் அலுவலக வாசலிலேயே தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்