August 25, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பத்திரிகை அறிக்கை

துணைவேந்தர் அலுவலகத்தை சுத்தப்படுத்துவதை எதிர்த்து போராடுவது மாணவர் அரசியலா? – ABVP-யின் நாடகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்!

T.பரமேஸ்வரி, தலைவர், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை கேட்பதை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம். குடிநீர் கேட்கலாம், தரமான உணவு கேட்கலாம், ஆய்வக வசதி கேட்கலாம், ஸ்கோபஸ் அணுகல் கேட்கலாம் – அது ஒவ்வொரு மாணவனின் ஜனநாயக உரிமை.

ஆனால், துணைவேந்தர் தனது அலுவலகத்தை சுத்தப்படுத்துவதையும், பழுதடைந்த அறையை சீரமைப்பதையும் எதிர்த்து போராடுவது – இது மாணவர் உரிமை போராட்டமா? அல்லது திட்டமிட்டு பல்கலைக்கழகத்தை சீர்குலைக்கும் சதியா?

ABVP தனது சுய விளம்பர லாபத்திற்காக மாணவர்களை தவறாக வழி நடத்துகிறதா என்ற சந்தேகம் எழுகிறது

  1. ஒரு அலுவலகத்தை சுத்தப்படுத்துவது ஆடம்பரமா? புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் பல வருடங்களாக பழுதடைந்து கிடக்கிறது. அதை சீரமைப்பது நிர்வாகத்தின் கடமை. அதை “நிதி தவறாக பயன்படுத்துதல்” என்று கூறுவது அப்பட்டமான அறியாமை.
  2. உங்கள் நோக்கம் மாணவர் நலனா? இயக்க லாபமா? பல்கலைக்கழகத்தில் உண்மையான பிரச்சினைகள் – புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு மறுப்பு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெல்லோஷிப் நிறுத்தம், தேசிய கல்வி கொள்கையால் மாணவர்கள் கல்வி பாதிப்பு – இதற்கெல்லாம் ABVP என்றைக்காவது வாய் திறந்ததா? இல்லை. துணைவேந்தர் அலுவலக பெயிண்ட் அடிக்கும் விஷயத்தில் மட்டும் 150 பேரை திரட்டி பேனர் பிடிப்பது – இது தான் உங்கள் சுய லாப அரசியல்.
  3. தவறான வழிகாட்டுதல்: “கேபின் புதுப்பிப்பை நிறுத்து” என்று முழக்கம் போடுவது மாணவர்களை தவறாக வழிநடத்தும் செயல். நாளைக்கு ஒரு ஹாஸ்டல் பாத்ரூம் சுத்தம் செய்தால் கூட “நிதி விரயம்” என்று போராடுவீர்களா? இது என்ன பகுத்தறிவு?

புதுச்சேரி மாணவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். எங்களுக்கு தேவை அடிப்படை வசதிகள். அதற்காக போராடுவோம். ஆனால் ஒரு அலுவலக சுத்தப்படுத்தும் பணியை தடுத்து, பல்கலைக்கழக நிர்வாகத்தை முடக்கி, அதில் அரசியல் லாபம் தேடும் ABVP-யின் இந்த நாடகத்தை புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

மாணவர்கள் உண்மையான பிரச்சினைகளுக்காக போராடுங்கள், வெற்று விளம்பரத்திற்காக அல்ல.

T.பரமேஸ்வரி
தலைவர்,
புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு
தேதி: 22.08.2026