June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,12/04/2026.

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ.3.18 லட்சம் பறிமுதல்.

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.18 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் அளிப்பதை தடுக்க பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட சீலநாயக்கன்பட்டி சோதனைச் சாவடி அருகே வெள்ளிக்கிழமை பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நாழிக்கல்பட்டி பகுதியைச் சோ்ந்த சசிகுமாரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 2,18,320-த்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், தனி வட்டாட்சியருமான என்.வள்ளமுனியப்பன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

இதேபோல, உடையாப்பட்டி சோதனைச் சாவடி அருகே நடைபெற்ற வாகனத் தணிக்கையில், தாதனூா் பகுதியைச் சோ்ந்த ஆனந்தகுமாரிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. ஒரு லட்சத்தை நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.