June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கண்டன அறிக்கை

நாள்: 17.05.2026

பொருள்: புதுச்சேரி Group-B தேர்வு தாள்-2ஐ ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதற்கு கடும் கண்டனம்

புதுச்சேரி தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள Group-B பணியிடங்களுக்கான Statistical Inspector, Library Assistant, Agriculture Officer தேர்வில், இரண்டாம் தாள் Paper 2A Subject Oriented முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கண்டனத்திற்கான காரணங்கள்:

  • சமவாய்ப்பு மறுப்பு: இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 16 அரசு வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிறது. தமிழ் வழியில் பயின்ற ஆயிரக்கணக்கான தகுதியுள்ள உள்ளூர் இளைஞர்களை இந்த முடிவு நேரடியாக புறக்கணிக்கிறது. இது சமத்துவ உரிமைக்கு எதிரானது.
  • அலுவல் மொழிச் சட்ட மீறல்: Puducherry Official Languages Act, 1965 தெளிவாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழ், ஏனாமில் தெலுங்கு, மாஹேவில் மலையாளம் ஆகியவை அலுவல் மொழிகள் என வரையறுக்கிறது. அரசுப் பணித் தேர்வுகளில் பிராந்திய மொழிகளைத் தவிர்ப்பது இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கிறது.
  • உள்ளூர் மக்கள் பாதிப்பு: அரசுப் பணிகள் உள்ளூர் மக்களுக்கே முதல் உரிமை. மொழித் தடையை உருவாக்கி தகுதியான புதுச்சேரி மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பது ஏற்க முடியாத அநீதி.
  • கல்வி முறைக்கு எதிரானது: தமிழக, புதுச்சேரி அரசுப் பள்ளி கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்று பட்டம் பெற்றவர்களை, தேர்வில் மட்டும் ஆங்கிலத்தை திணிப்பது முரணானது மற்றும் பாரபட்சமானது.

எமது கோரிக்கைகள்:

  1. தேர்வுக் குழுமம் உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.
  2. Paper 2A தாளை ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று பிராந்திய அலுவல் மொழிகளிலும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
  3. எதிர்காலத்தில் அனைத்து அரசுப் பணித் தேர்வுகளிலும் பிராந்திய மொழிகளுக்கு உரிய இடம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

புதுச்சேரி மண்ணின் மைந்தர்களின் உரிமையைப் பறிக்கும் இந்த மொழித் திணிப்பு முடிவை தேர்வுக் குழுமம் மறுபரிசீலனை செய்யவில்லை என்றால், தேர்வர்கள் நலன் காக்க ஜனநாயக வழியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

சீ.சு.சுவாமிநாதன்
நிறுவனத் தலைவர்
தேசிய மக்கள் முன்னணி
9787721199
www.dmmparty.com