February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இபிஎஸ் இன்று பிரச்சாரம்…

செங்கோட்டையன் கோட்டையில் பலத்தை நிரூபிக்க திட்டம்…

குள்ளம்பாளையம் குருவா..,? சிலுவம்பாளையம் சிஷ்யனா..? எது பெருசு அடிச்சு காட்டு…

ஈரோடு. நவ. 30

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று மாலை நடைபெறும் இரண்டாம் கட்ட பிரச்சார கூட்டத்தில் இபிஎஸ் கலந்து கொண்டு பேசுகிறார். செங்கோட்டையன் கோட்டையில் தனது பலத்தை நிரூபிக்க திட்டமா..? கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.

திமுகவில் இருந்து பிரிந்து வந்த எம் ஜி ஆர், 1972 ஆம் ஆண்டு அதிமுக என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். கடும் நெருக்கடியிலும் ஐந்தாண்டு காலம் கட்சியை வழிநடத்தி வந்த எம்ஜிஆர் 1977 ஆம் ஆண்டு அப்பொழுது நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஆனார்.

இப்படி எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியதில் இருந்து, ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் திமுக ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்த கே. ஏ செங்கோட்டையன் எம்ஜிஆரை சந்தித்து அப்பொழுதே அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அன்று முதல் எம்ஜிஆர் மறையும் வரை, அவரின் முக்கியமான நம்பிக்கைக்கு உரியவராக கே ஏ செங்கோட்டையன் இருந்து வந்தார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சி மற்றும் கட்சி பொறுப்புகளை ஏற்றபோது அன்று முதல் ஜெயலலிதா மறையும் வரை அவருக்கு நம்பிக்கையான தளபதியாக கே ஏ செங்கோட்டையன் இருந்து வந்தார்.

எம்ஜிஆரின் உத்தரவை ஏற்று முதல் முறையாக சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு 1977 ஆம் ஆண்டு செங்கோட்டையன் வெற்றி பெற்றார். அதன் பிறகு தனது சொந்தத் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் ஒன்பது முறை களம் கண்ட செங்கோட்டையன் அதில் ஒரு முறை மட்டும் தோல்வி அடைந்து, எட்டு முறை வெற்றி பெற்று கோபிசெட்டிபாளையம் தனது கோட்டை என தக்க வைத்துள்ளார்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முக்கிய துறைகளின் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

அதேபோல் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிளைச் செயலாளர் இருந்து வந்த எடப்பாடி பழனிசாமியை முதல் முறையாக ஜெயலலிதாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி அதிமுகவில் அவரை இணைத்தது செங்கோட்டையன் தான்.

அதனால் எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையன் அரசியல் குருவாக இருந்து வந்தார். சில வழக்குகளில் இருந்தும் எடப்பாடி பழனிசாமியை செங்கோட்டையன் காப்பாற்றி உள்ளார்.

இந்த நிலையில் ஒன்றாக கொங்கு மண்டலத்தில் அரசியல் செய்து வந்த இருவரும், ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சிறு சிறு மனசாபங்கள் ஏற்பட்டு பின்னர் நிரந்தரமாக இருவரும் பிரிய கூடிய ஒரு அரசியல் சூழ்நிலை ஏற்பட்டது.

செங்கோட்டையன் அதிமுகவில் அறிமுகம் செய்யப்பட்டு அரசியலுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, அந்த அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது தான் அரசியல் சித்து விளையாட்டு.

செங்கோட்டையன் தற்போது நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

அந்த கட்சியில் அவர் சேர்ந்த உடனே அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தலைம ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளராகவும், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களின் கட்சியின் மண்டல பொறுப்பாளராகவும் உடனடியாக அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

தவெகவில் செங்கோட்டையன் இணைந்த பிறகு முதல் முறையாக தனது சொந்த ஊரான கோபிச்செட்டிபாளையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்தபோது, அவருக்கு அவரின் ஆதரவாளர்களும் தவெகவினரும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்பொழுது பேசிய செங்கோட்டையன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் தன்னுடன் இணைய உள்ளார்கள் என தகவல் ஒன்றை தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று 30 ஆம் தேதி மாலை கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை. தொடங்க உள்ளார்.

இது வெறும் தேர்தல் பிரச்சாரமாக மட்டுமல்லாமல் செங்கோட்டையனின் சொந்த தொகுதியான அப்பகுதியில் தனது செல்வாக்கை நிறுவி வைக்கவும், அதிமுகவினர் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் எடப்பாடி பழனிசாமியின் கோபிசெட்டிபாளையம் தேர்தல் பிரச்சாரம் இருக்கும் என கருதப்படுகிறது.

ஒரே சமுதாயத்தை சேர்ந்த, ஒரே இயக்கத்தில் கைகோர்த்து அரசியல் செய்த, செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டுள்ள, அரசியல் பலத்தை காட்டும் போட்டியால் கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Facebook
YouTube
Instagram
WhatsApp