நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் தொடரும் விதிமீறல்; எச்சரிக்கை பலகைகள் சேதம்
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கலைமகள் பள்ளி அருகே உள்ள சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான ஒருவழிப்பாதையில் (One-Way) விதிகளை மீறிச் செல்லும் வாகனங்களால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனைச் சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மத்தூரிலிருந்து வெளியேறி, திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளும், பொதுமக்களும் கலைமகள் பள்ளி பகுதியில் உள்ள இந்த ஒருவழிப்பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நெடுஞ்சாலையிலிருந்து மத்தூர் ஊருக்குள் நுழையும் வாகன ஓட்டிகள் சிலர், சுற்றியாராமல் தூரத்தைக் குறைப்பதற்காக விதிகளை மீறி, இதே ஒருவழிப்பாதையிலேயே ‘நோ-என்ட்ரி’ (No Entry) பகுதியில் தவறான திசையில் அதிவேகமாக நுழைகின்றனர்.
நெடுஞ்சாலையில் வாகனங்கள் இவ்வாறு அதிவேகமாக விதிமீறி வருவதால், இப்பகுதியைக் கடக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினசரி அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதியில் தினசரி சிறு, பெரு விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.
இப்பகுதியில் விபத்துகளைத் தடுக்க மத்தூர் காவல்துறையினர் சார்பில், கடந்த காலங்களில் மூன்று தற்காலிக எச்சரிக்கை தடுப்புப் பலகைகள் வைக்கப்பட்டன. ஆனால், அவ்வழியாகச் செல்லும் சமூக விரோதிகள் மற்றும் வழிப்போக்கர்கள் அந்த எச்சரிக்கை பலகைகளைச் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் தற்போது அங்கு எந்தவொரு எச்சரிக்கை குறியீடும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
விதிமீறல் ஒருபுறமிருக்க, கலைமகள் பள்ளி பகுதி சாலையில் வெளியேறி நெடுஞ்சாலைக்குள் நுழையும் இடமானது மிகவும் மோசமடைந்துள்ளது. சாலை முழுவதும் பெரிய பள்ளங்களுடன் கரடுமுரடாகக் காட்சியளிக்கிறது. பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் இந்தத் பள்ளங்களில் இறங்கி ஏறும் போது நிலைதடுமாறி விழும் அபாயமும் நீடித்து வருகிறது
காவல்துறையினர் தற்காலிக நடவடிக்கை எடுத்தும், நெடுஞ்சாலைத் துறையினர் இதுவரை இப்பிரச்சினையைக் கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பெரும் அசம்பாவிதங்கள் ஏதேனும் நடப்பதற்குள், நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக தலையிட்டு, கலைமகள் பள்ளிப் பகுதி சாலையில் உள்ள பள்ளங்களைச் சீரமைக்க வேண்டும். மேலும், ஒருவழிப்பாதையில் வாகனங்கள் தவறான திசையில் நுழைவதைத் தடுக்க நிரந்தரத் தடுப்புகளை (Barricades) அமைத்து, புதிய எச்சரிக்கை பலகைகளை நிறுவ வேண்டும் எனப் பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது