June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,25/06/2026.

சேலத்தில் 928 குழந்தைகள் மீட்பு – குழந்தை தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க கள ஆய்வு.

சேலம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்கவும்,குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒவ்வொரு மாதமும் தீவிரக் கள ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகச் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீமுரளி தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அதன் மூலம் மீட்கப்பட்ட குழந்தைகளின் புள்ளிவிவரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குழந்தைகள் பாதுகாப்புத் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து தொடர் சோதனைகளை நடத்தி வருகின்றன. இதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான 5 மாத காலப்பகுதியில் மட்டும் சுமார் 928 குழந்தைகள் தொழிலாளர் முறையிலிருந்தும், பாதுகாப்பற்ற சூழல்களிலிருந்தும் மீட்கப்பட்டு, அவர்களுக்கு உரிய மறுவாழ்வுத் தீர்வுகள் காணப்பட்டுள்ளன.

மேலும், அநாதரவான மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளைப் பொதுமக்கள் சட்டவிரோதமாக வளர்ப்பதைத் தடுத்து, சட்டரீதியான நடைமுறைகளைப் பின்பற்றி குழந்தைகளைத் தத்து எடுப்பதற்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 5 மாதங்களில் மட்டும் மாவட்டத்தில் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, சட்டவிரோதமாக நடத்தவிருந்த 29 குழந்தை திருமணங்களை உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகள் மற்றும் பகுதிகளில் உள்ள சுமார் 12,149 குழந்தைகளுக்கு, பாலியல் தொந்தரவுகள் மற்றும் அத்துமீறல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் பொதுமக்கள் தங்களுக்குத் தெரியவரும் குழந்தை உழைப்பு மற்றும் குழந்தை திருமணங்கள் குறித்து உடனடியாக ‘1098’ என்ற இலவச உதவி எண்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.