June 18, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,09/06/2026.

சேலத்தில் IISER-ல் நுழைவுத் தேர்வு எழுத சென்ற +2 மாணவன் லாரி மோதி பலி – அண்ணண் உயிருக்குப் போராட்டம்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே,புகழ்பெற்ற ‘ஐசர்'(IISER)கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதற்காக நுழைவுத் தேர்வு எழுத இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் மாணவன் ஒருவன், லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகவுசிக் (18) என்ற மாணவர் அண்மையில் வெளியான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 564 மதிப்பெண்கள் பெற்றுப் பிரம்மாண்ட சாதனை படைத்திருந்தார். மத்திய அரசின் புகழ்பெற்ற இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து விஞ்ஞானியாக வேண்டும் என்ற லட்சியத்தோடு, அதற்கான நுழைவுத் தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வந்துள்ளார்.

நேற்று ‘ஐசர்’ நுழைவுத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், மாணவன் ஹரிகவுசிக் தனது அண்ணன் ஹரிசுகன் (22) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தேர்வு மையத்தை நோக்கிப் புறப்பட்டுள்ளார். வண்டியை அவரது அண்ணன் ஹரிசுகன் ஓட்டிச் சென்றுள்ளார். சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, இவர்களது இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் அதிவேகமாகப் பயங்கரமாக மோதியது.

இந்தக் கொடூர விபத்தில் படுகாயமடைந்த மாணவன் ஹரிகவுசிக், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார். அவரது அண்ணன் ஹரிசுகன் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி போலீசார், உயிரிழந்த மாணவன் ஹரிகவுசிக்கின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு எழுதச் சென்ற மாணவன், தேர்வு எழுதாமலேயே விபத்தில் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் சக மாணவர்களிடையே பெரும் நெஞ்சடைப்பை ஏற்படுத்தியுள்ளது.