August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இலவச வேஷ்டி-சேலை நூல் விடுவிப்பு மற்றும் கூலி உயர்வு அறிவிப்பை உடனடியாக வெளியிட விசைத்தறி கூட்டமைப்பு கோரிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேஷ்டி மற்றும் சேலை உற்பத்திக்குத் தேவையான நூல்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும், புதிய வடிவமைப்புக்கு ஏற்ப கூலி உயர்வு அறிவிப்பை வெளியிட வலியுறுத்தியும் ஈரோட்டில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கைத்தறி துறை உதவி இயக்குநரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாநிலத் தலைவர் எல்.கே.எம்.சுரேஷ் மற்றும் மாநில பொருளாளர் கே.பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் ஈரோடு, சித்தோடு, லக்காபுரம், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் இந்த மனு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பல லட்சம் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்திட்டத்திற்கான அரசாணை கடந்த ஜூலை 1-ஆம் தேதி வெளியிடப்பட்டு முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், 50 நாட்களுக்கு மேலாகியும் நூல் டெண்டர் பணிகள் நிறைவடையாமலும், கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து நூல் விடுவிக்கப்படாமலும் உற்பத்தித் தொடங்குவதில் தாமதம் நீடித்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக வேலை வாய்ப்பின்றி நெசவாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக நூல்களை விடுவித்து உற்பத்திப் பணிகளைத் தொடங்குவதோடு, புதிய வடிவமைப்புக்கு ஏற்ப கூலி உயர்வையும் அரசு உடனே அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.