எளிமையாகும் குழந்தைகளின் கல்வி..
ஈரோடு புத்தகத் திருவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு..
ஈரோடு. ஆகஸ்ட். 02
ஈரோட்டில் நடைபெற்ற 22 ஆவது ஆண்டு புத்தக திருவிழாவில் கலந்துகொண்டு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் புத்தக அரங்கத்தை திறந்து வைத்து பேசினார்.
ஈரோடு சிக்கைய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், ஈரோடு மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை மக்கள் சிந்தனை பேரவை இணைந்து 22 ஆம் ஆண்டு மாபெரும் புத்தக திருவிழா கண்காட்சியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.


இந்தப் புத்தக திருவிழா கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி பதிப்பாகங்கள், நூலாசிரியர்கள் ஆகியோரின் படைப்புகள் புத்தக திருவிழாவில் இடம் பெற்றிருந்தது.
12 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் செய்தி துறை அமைச்சர் ராஜ்மோகன் ரிப்பன் பட்டி புத்தக கண்காட்சி அரங்கத்தினை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் புத்தக அரங்குகளை அவர் பார்வைத்தார். தொடர்ந்து அருகில் அமைக்கப்பட்டிருந்த புத்தகத் திருவிழா விழா மேடையில், புத்தகத் திருவிழா தொடக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்தார்,
மக்கள் சிந்தனை பேரவை தலைவரும் புத்தகத் திருவிழா கண்காட்சியின் ஏற்பாட்டாலருமான ஸ்டாலின் குணசேகரன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்கு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சண்முகன், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆனந்த மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி, மற்றும் பள்ளி கல்வித்துறை மற்றும் செய்தி துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு புத்தகங்கள் வாசிப்பது குறித்து பேசினர்.
நிகழ்ச்சியின் இறுதியாக, தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது..,
பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் மாபெரும் புத்தக திருவிழா நடைபெறுகிறது. இதில் இன்று நான் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். புத்தகங்கள் வாசிப்பது என்பது இந்த காலகட்டத்தில் சற்று குறைவாக உள்ளது. காரணம் அனைவரின் கைகளில் உள்ள செல்போன். நல்ல புத்தகங்களை வாசிக்கும் பொழுது ஒரு நபர் சிறந்த மனிதனாக உருவாக்கப்படுகிறான்.
அதற்கு நானே உதாரணம். நான் சிறு வயதாக இருக்கும் பொழுது மிகவும் சுட்டித்தனமாக திரும்பி வருவேன். இளம் வயது நண்பர்களோடு கிரிக்கெட் விளையாட சென்று விடுவேன். அப்படி ஒரு நாள் விளையாடும் பொழுது வந்து ஒரு குழியில் விழுந்து விட்டது. அதனை நான் எடுக்க முயன்ற போது, அங்கிருந்த கண்ணாடி விரியன் பாம்பு என்னை கடித்து விட்டது.
அதன் பின்னர் எனது தாயாரும், நண்பர்களும், நல்ல உள்ளம் கொண்ட சில மருத்துவர்களும் என்னை போராடி எனது உயிரை காப்பாற்றினர்.
அதன் பிறகு எனது பெற்றோர் என்னை கண்டிப்போடு உருப்படியாக படித்து வாழ்க்கையில் முன்னுக்கு வா என கடுமையாகத் திட்டி நல்வழிப்படுத்தினர்.
அதன் பின்பு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொறுப்புடன் படித்து வந்தேன், இந்த சமயங்களில் சென்னையில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கு சென்று சிறந்த புத்தகங்களை ஆர்வத்துடன் படித்து வந்தேன். இதன் காரணமாக தாய்மொழி தமிழ், தாய் நாடம் தமிழ்நாடு, இந்திய தேசம் மற்றும் உலக விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
இங்கு வந்திருக்கும் பெற்றோர்கள் நல்ல புத்தகங்களை தங்கள் பிள்ளைகளுக்கு பரிசாக வழங்கி அவர்களுக்கு வாசிக்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.
இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் ஒரு புதுமையை புகுத்தி பள்ளிக் கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறோம்.
அதேநேரம் ஆசிரியர்களும், பெற்றோர்களும் பிள்ளைகளை படி, படி என்று தொந்தரவு செய்யக்கூடாது. எளிய முறையில், கனிவோடு கற்றுக் கொடுத்தாலே போதும் பிள்ளைகள் கற்றுக் கொள்வார்கள். மதிப்பெண் குறைவு என்று குறை சொல்லாதீர்கள். மதிப்பெண் என்பது ஒரு அடையாளம் மட்டுமே. அவர்களுக்கு விளையாட்டு மற்றும் அவர்கள் விரும்பும் துறைகளில் உள்ள ஆர்வத்தை கண்டுபிடித்து ஊக்கப்படுத்துங்கள்.
பள்ளியிலும், வீட்டிலும் அவர்கள் சுதந்திரமாக விளையாட அனுமதியுங்கள்.
இனி வரும் நாட்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிக்கன் அசைவ உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்காக, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்
இனி வரும் நாட்களில் பள்ளிக் கல்வித் துறையில், சில எளிய வகையான பாடங்களை மாணவர்களுக்கு முன்னெடுக்கப்படும்.
கதை வழி கணினி பாடம் போன்று அனைத்து பிரிவு பாடங்களுக்கும் மிக மிக எளிமையான முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும்.
இவ்வாறு ஈரோடு புத்தகத் திருவிழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.
நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அரபித் ஜெயின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் மற்றும் புத்தக பதிப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி செக்கோவர் நிறுவனம் சார்பில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.
விழுப்புரத்தில் அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்
பள்ளிபாளையம் பகுதிகளில் தொடரும் சாயப்பட்டறைகளின் அத்து மீறல்கள்..