July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

21.07.2026துப்புரவுப் பெண் தொழிலாளர்களுக்குகுறைந்தபட்ச கூலி வழங்க மறுக்கும்புதுச்சேரி அரசுக்கு திமுக கண்டனம் !

புதுச்சேரி மாநிலத்தில் பணியாற்றும் துப்புரவுப் பெண் தொழிலாளர்களுக்கு அறிவித்த குறைந்தபட்ச கூலி வழங்க மறுக்கும் புதுச்சேரி அரசுக்கு திமுக அமைப்பாளர் இரா. சிவா கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அவர்களுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்ட கூலியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: –
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கிரீன் வாரியார்ஸ் நிறுவனமும், ஹெச்ஆர்–ஸ்கொயர் நிறுவனமும் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 1,500க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலி கூட அளிக்கப்படாமல் கொத்தடிமைப்போல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.
சென்னை, பெங்களூரூ போன்ற இடங்களில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில், புதுச்சேரியில் வெறும் ரூ. 8 ஆயிரம் மட்டும் கொடுத்து அவர்கள் சுரண்டப்படுவது கொடுமையானது ஆகும். ஒருபுறம் குறைந்த கூலியும், மறுபுறம் ஆட்கள் பற்றாக்குறையும் இருப்பதால் சுத்தம், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலிச்சட்டம் தொழிலாளர் துறையால் 2013–ல் கொண்டுவரப்பட்டும் இதுவரை அது பின்பற்றப்படுவதில்லை. இதனை நிறைவேற்றக்கோரி சென்ற ஆண்டு சட்டமன்றம் முன்பு எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 25.05.2026 அன்று உள்ளாட்சித் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, 1. குறைந்தபட்ச கூலி ரூ. 12,726/–, 2. சம்பளத்துடன் வார விடுமுறை, 3. தேசிய விடுமுறையில் இரட்டிப்பு சம்பளம், 4. பிஎப்., இஎஸ்ஐ பிடித்தம், 5. சம்பள ரசீது உள்ளிட்டவை உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதில் எதுவும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. சம்பளத்தில் மட்டும் பெயருக்கு ஆயிரம் ரூபாய் உயர்த்திவிட்டு குறைந்தபட்ச கூலி ரூ. 12,726/– என்பது வெறும் ஏட்டளவில் உள்ளது. ஓராண்டு முடிந்தும் பிஎப், இஎஸ்ஐ போன்றவைகளுக்கு பிடித்தம் செய்த தொகை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்தப்படவில்லை. அதனால் விபத்தில் சிக்கும் தொழிலாளர்களுக்கு சிகிச்சையோ, விடுமுறையோ கிடைக்காமல் தவிக்கும் நிலை தொடர்கிறது.
இத்துடன் நிற்காமல் சம்பள உயர்வு அறிவிப்பு செய்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிசெய்த தொழிலாளர்கள் 200 பேர் வரை 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று காரணம் கூறி எவ்வித முன்னறிவிப்பு இன்றியும், மாற்றுத் தொழிலாளர்களை நியமிக்காமலும் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளனர். அரசின் உத்தரவை செயல்படுத்த மறுத்து இத்தகைய அடாவடித்தனத்தை கண்டிக்க வேண்டிய உள்ளாட்சித்துறை இயக்குநர் ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல்படுவது ஏற்புடையதல்ல.
ஆகவே, புதுச்சேரி மாநிலத்தை இரவு, பகலாக தங்கள் உழைப்பின் மூலம் தூய்மைப் பகுதியாக மாற்றி வரும் ஏழை துப்பரவுத் தொழிலாளர்களுக்கு அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச கூலி உள்ளிட்ட உறுதிமொழிகளை உடனடியாக இவ்வரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வயது முதிர்வு என்று வெளியேற்றப்பட்டவர்களை உடனடியாக திரும்ப வேலைக்கு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.