April 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,07/04/2026.

சேலத்தில் இபிஎஸ் சொன்னது உண்மைதான் – கூட்டணி மாறியற்காக தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை!

சேலம்:தேமுதிக கூட்டணி மாறியதால்தான் ராஜ்யசபா எம்பி சீட் கொடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தேமுதிகவுடன் அப்படி ஒரு ஒப்பந்தமே போடவில்லை என எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்த நிலையில் அதற்கான ஆதாரத்தை பிரேமலதா விஜயகாந்த் காட்டினார்.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் வேட்புமனுவை தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பிரேமலதா காட்டிய ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தேமுதிக கூட்டணி மாறியதால் ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை. தேமுதிகவுக்கு 0.5 சதவீதம் வாக்கு வங்கி இருப்பது உண்மைதான் என்றார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், பழனிசாமி எங்களைப் பற்றி வரம்பு மீறி பேசியுள்ளார். அரசியல் கண்ணியத்தின் காரணமாக இதுவரை காட்டாத அந்த ஆதாரத்தை வெளிப்படுத்தும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிட்டார், என்றார்.

தனது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட ஒப்பந்த ஆவணத்தையும் செய்தியாளர்கள் மத்தியில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி அப்படியொரு ஒப்பந்தம் போடப்பட்டதை மறுத்திருந்தார்.

அவர் காட்டிய ஒப்பந்த ஆவணத்தில், 2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 மக்களவைத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ராஜ்யசபா சீட்டுக்கான ஆண்டு பற்றிக் கேட்டபோது, எடப்பாடி பழனிசாமி, “எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே வருஷத்தை போட்டு கொடுப்பதில்லை. என் வார்த்தையை நம்புங்கள்,” என்று கூறியதாக பிரேமலதா தெரிவித்தார்.

மேலும், “இதெல்லாம் வெறும் பேப்பர்தான்மா. நான் சொல்கிறேன் 2025 -ல் ராஜ்யசபா சீட் உங்களுக்குத்தான்” என்றும் பழனிசாமி உறுதியளித்ததாக பிரேமலதா கூறினார். ஆனால், 2025 மாநிலங்களவைத் தேர்தல் வந்தபோது, அந்த வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமி முற்றிலும் மறுத்துவிட்டார். “அப்படியொரு ஒப்பந்தமே போடவில்லை” என்று கூறி தேமுதிகவை ஏமாற்றியதாக பிரேமலதா கடுமையாகச் சாடினார்.

மறுபுறம், எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. இக்கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சட்டசபைத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதன் பலனாக, தேமுதிக சார்பில் சுதீஷ் ராஜ்யசபா எம்பியாகி, தற்போது அப்பதவியில் தொடர்கிறார். மேலும், 10 சட்டசபைத் தொகுதிகளுக்கும் தேமுதிக வேட்பாளர்களை நிறுத்தி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

எனினும், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத தேமுதிகவுக்கு இத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது பல்வேறு அரசியல் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவை “அங்கீகாரம் இல்லாத கட்சி” என மிகவும் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தார்.

“அரை சதவீதம் மட்டுமே வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குக் கூட குறைந்த சீட்டுகளே அளிக்கப்பட்ட நிலையில், தேமுதிகவுக்கு மட்டும் இத்தனை சீட்டுகள் ஏன்?” என்று எடப்பாடி பழனிசாமி சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலடி கொடுத்த பிரேமலதா, “2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவின் ஆதரவால்தான் அதிமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. தமிழக அரசியல் வரலாற்றில் தேமுதிகதான் மூன்றாவது பெரிய கட்சி” என்று திட்டவட்டமாக முழங்கினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp