தொடர்ந்து சர்ச்சை பேசிகளை பேசி வரும் அமைச்சர்களால் முதல்வர் விஜய்க்கு தர்ம சங்கடம்…
ஒரு அமைச்சர் என்பவர் எவ்வாறு பேச வேண்டும் என பயிற்சி வழங்க கோரிக்கை…
ஈரோடு. ஜூலை 01
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பணம் வாங்கி ஓட்டு போட்ட மக்கள் தான் பெரும் ஊழல்வாதிகள் என்று கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி பொது மேடை ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், போட்டியிட்ட கட்சிகளில் கூடுதல் இடங்களை பெற்ற ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து நடத்தி வருகிறார்.
ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில்,தவெகவினர் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பலருக்கும் அமைச்சர் அவையில் இடம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் புதிய கட்சி, புதிய ஆட்சி, ஆட்சி நிர்வாகத்திற்கு புதிய அமைச்சர்கள் என்ற பார்முலாவில் தமிழக அமைச்சரவை செயல்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சர் அவையில் வருவாய் துறை அமைச்சராக இருக்கும் கே ஏ செங்கோட்டையனை தவிர மற்றவர்கள் அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்திற்கு புதியவர்கள்.
இந்த நிலையில் தமிழக அமைச்சர் அவையில் உள்ள புதிய அமைச்சர்கள் தங்களின் துறை சார்ந்த செயல்பாடுகளில் உரிய விவரங்களை இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் பல்வேறு நிர்வாக குளறுபடிகள் உள்ளதாக தெரிய வருகிறது.
இவைகள் போதாது என்று பொதுவெளிகளில் பல அமைச்சர்களின் செயல்பாடுகளும், பேச்சுக்களும் பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. அதோடு சர்ச்சைகளையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
அந்த வகையில் தமிழக அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக உள்ள ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த மூத்த அமைச்சர் கே எ செங்கோட்டையன் சமீபத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஒரு புதிய அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்றும், அந்த அடையாள அட்டையில் மாணவர்களின் பெயர், முகவரி, ரத்த வகை, மற்றும் எந்த சாதியை சேர்ந்தவர் என்ற விவரமும் இடம்பெறும் என்று பேசி இருந்தார்.
வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனின் இந்த பேச்சு, நாடு முழுவதும் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அது மாதிரி இல்லாமல் புது மாதிரியாக மாணவர்களுக்கு அடையாள அட்டை ஏற்பாடு செய்து வழங்கப்படும் என்று ஒரு வழியாக சர்ச்சையை சமாளித்தார் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
மூத்த அமைச்சர் கே எ செங்கோட்டையனின் இந்த பேச்சுக்கு அவர்களின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் உள்பட பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
அதேபோல் தமிழகத்தில் நடைபெறும் பெண் குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமை குறித்து பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி இடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் சிரித்துக் கொண்டே இந்த குற்றங்கள் எல்லா ஆட்சியிலும் தான் நடைபெறுகிறது, குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் என ஈசியாக அந்த விஷயத்தை கடந்து சென்றது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி, அமைச்சர் விஜயலட்சுமிக்கு எதிரான ஒரு எதிர் வினையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சிவகங்கையில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில், இரு பெண் அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி கலந்து கொண்ட நிலையில் யார் பெயரை முதலில் போடுவது என்ற பிரச்சினையை இருவரும் ஏற்படுத்தி பொது மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, அந்த மாவட்டத்தினுடைய ஆட்சித் தலைவரை அழைத்து நிற்க வைத்து கேள்வி கேட்டது என்பதெல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி தமிழக முழுவதும் பெரும் பேசு பொருளானது.
அடுத்ததாக இதே போல் ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் நடைபெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி பேசியதும் இன்றைக்கு பெரும் சர்ச்சையாகி உள்ளது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜய பாலாஜி, தமிழகத்தில் தலைவர் விஜய் சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார்.
அதே நேரம் கடந்த சட்டமன்ற பொது தேர்தலில், பொதுமக்களாகிய நீங்கள் பல கட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு ஊழல் செய்து உள்ளீர்கள்.
பணத்தை வாங்கிக்கொண்டு எங்களுக்கு வாக்களித்து எங்களை ஆட்சியில் அமர வைத்து உள்ளீர்கள். இருப்பினும் பொதுமக்கள் பணம் வாங்கியது ஊழல் தான் என்று பொதுமக்கள் ஊழல்வாதிகள் என்று சித்தரிக்கும் வகையில் அமைச்சர் விஜய பாலாஜி பேசியது வைரலாகி வருகிறது.
அமைச்சர் விஜய் பாலாஜி இந்த பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இன்று அமைச்சராக உள்ள விஜய பாலாஜி, நீண்ட காலமாக விஜயின் மக்கள் இயக்கத்தில் இருந்து வந்தவர் என்பதன் அடிப்படையில் அவருக்கு தேர்தலில் நிற்க சீட்டு கொடுத்து தற்போது அமைச்சராகும் அவரை விஜய் நியமித்துள்ளார்.
தனக்கு இவ்வளவு பெரிய பதவியை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜயின் பெயருக்கு களங்கம் வராமல் பார்த்துக் கொள்வது அமைச்சர் விஜய் பாலாஜியின் பொறுப்பு என்று ஈரோட்டில் பலரும் பேசி வருகின்றனர்.
இதுபோன்று இன்னும் சில சட்டமன்ற உறுப்பினர்களும், அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் பல்வேறு பொது இடங்களில் பேசி வரும் சர்ச்சை பேச்சால் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருவதாக, அரசியல் ஆர்வலர்கள் தங்களின் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதேநேரம் பொதுமக்களும் தமிழக வெற்றி கழக அமைச்சர்களின் பேச்சு குறித்து தங்களின் அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
அரசு நிர்வாகத்தில் அமைதி காத்து வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இதுபோன்று அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுக்கு உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்