புதுச்சேரி:
புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் “பாலின உணர்வு மற்றும் சர்வதேச மகளிர் தின விழா” இன்று (12-03-2026, வியாழக்கிழமை) காலை 10:00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் இரா. கருப்புசாமி தலைமை தாங்கி உரையாற்றினார். அவர் தனது உரையில், “உலக மகளிர் தினம் நம் கல்லூரியில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் மகளிர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு காலத்தில் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடந்த பெண்கள், இன்றைக்கு சாத்திரங்களையும் சரித்திரங்களையும் படைத்துக் கொண்டுள்ளனர்” என்று கூறி அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் இரா. அகிலா தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க, தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் க. ரேவதி வரவேற்புரை வழங்கினார். புதுச்சேரி அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குனர் டாக்டர் ராம்குமார் சுகுமாரன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மனநல மருத்துவத்துறை மருத்துவர் டாக்டர் அஸ்வினி அணுக்கிரஹா, பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற பாரதியின் கனவு இன்று நனவாகி வருவதாகவும், உலக அளவில் பெண்கள் வியக்கத்தக்க சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்தக் கல்வி ஆண்டில் பணி ஓய்வு பெறும்,
கணிதத்துறைப் பேராசிரியர் முனைவர் சாந்தி
தமிழ்த்துறையைச் சேர்ந்த முனைவர் இரா. அகிலா
அலுவலகப் பணியாளர்கள் திருமதி. சரசு மற்றும் திருமதி. சரோஜா
ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
விழாவிற்கு முன்னதாக, கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள் மற்றும் அலுவலகப் பெண் பணியாளர்கள் ஒருங்கிணைந்து மகளிர் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி ஒன்றையும் நடத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, சிறப்புத் திறன் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகள் மையத்தின் (CECA) ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சுனிதா நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியைத் தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் க. கண்ணன் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் ஏராளமான மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election