புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் குறித்து, புதுச்சேரி 10 ரூபாய் சட்ட இயக்கத்தின் நிறுவனர் ரகு என்கின்ற ரகுநாதன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து பங்கேற்காததால், புதுச்சேரிக்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரகுநாதன் குற்றம்சாட்டியுள்ளார். “மாநாட்டிற்குச் சென்று கேட்கும்போதுதான் உரிமைகளையும் திட்டங்களையும் பெற முடியும்; மாநில அந்தஸ்தையும் நேரில் சென்று வலியுறுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புதுச்சேரி தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிலையில், முதலமைச்சர் பதவியை இளைய தலைமுறைக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநில அந்தஸ்து கிடைத்தால் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவுகள் தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்றும், மதுபான ஆலைகள் மற்றும் மதுக்கடைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அமுதசுரபி, பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட நிறுவனங்களின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான நிதி நிலை குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், அரியாங்குப்பத்தில் உள்ள பழமையான சுயம்பு புற்றுக்கோவில் தொடர்பாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கோவில் மற்றும் சிலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காலாவதியான மற்றும் போலி மருந்துகள், போலி பத்திரங்கள், கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பிரச்சினைகள் மற்றும் தவறான முறையில் உரிமங்கள் வழங்கப்படுவது அதிகரித்து வருவதாகவும் ரகுநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
“மண்ணின் மைந்தர்கள் புதுச்சேரியில் வாழ முடியாத நிலை உருவாகக் கூடாது; மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சர்வாதிகாரம் அதிகரிக்காமல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
— ரகு என்கின்ற ரகுநாதன்
நிறுவனர், புதுச்சேரி 10 ரூபாய் சட்ட இயக்கம்

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…