பாரத நாடு பழம்பெரும் நாடு! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்! என்ற மகாகவி பாரதியின் வைர வரிகளுக்கு ஒப்ப, நமது நாடு பழமையான ஒரு நாடு. தற்போது உள்ளது போல பாரதம் அந்தக் காலத்தில் தனித் தனி மாநிலங்கள் இருக்காது. சிற்றரசு, பேரரசு என சிறு சிறு பகுதிகளாகப் பிரிந்து அவரவர் எல்லையைப் பொறுத்து குறுநில மன்னர்கள், ஆட்சி செய்தார்கள். இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லை.
எல்லாருமே இந்தியாவைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்து வந்தனர். இப்படிப் பிரிந்து கிடந்திருந்ததாலும் , ஒற்றுமை இல்லாததாலும் பரங்கியர் என்று அழைக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் இந்தப் பிரிவினையை தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். மன்னர்களிடம் நயவஞ்சகமாக பேசி சூழலைப் பயன்படுத்தி நமது நாட்டுக்குள் வஞ்சகமாக நுழைந்து, நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
மன்னர் கால ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம். மக்கள் சுயமாக தனித்து செயல்பட முடியாது. கருத்துக்களை கூற முடியாது. ஏன் தாமாக சிந்திக்கவும் கூட முடியாது. சுதந்திரம் பற்றி கனவு காண முடியாது. மன்னர் இறந்தால், அவருடைய நேரடி வாரிசு அடுத்த மன்னராகிவிடுவார். இத்தகைய முடியாட்சியின் வரி வசூல் செய்த ராச்சியங்களின் கொடுங்கோன்மையால் ஏழை எளியவர்களுக்கு துன்பமே மிஞ்சியது. அதன் பின் வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லை. அவர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு அளவில்லாமல் போனது. அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்கள் நம் தேச பக்தர்கள். தங்கள் இன்னுயிரையும் ஈந்து சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள்.
ஆகஸ்ட் 15, 1947 அன்று நாம் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றோம், ஆனால் நமக்கு எந்த வகையான அரசாங்கமோ அல்லது அரசியலமைப்போ அல்லது அரசியல் கட்சிகளோ இல்லை. ஜனவரி 26, 1950 அன்று, இந்தியா அரசியலமைப்பை அமல்படுத்தியது. பண்டித ஜவஹர்லால் நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் பூர்ண ஸ்வராஜ் 1930 ஜனவரி 26 அன்று அறிவிக்கப்பட்திருந்தாலும் கூட, ஆகஸ்ட் 15, 1947 அன்று தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது.
சுதந்திர இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்ட வரைவு குழுத் தலைவராக டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் 1947 ஆகஸ்ட் 29 ஆம் நாள் நியமிக்கப்பட்டார்.
அந்தக்குழுவில் உறுப்பினர்களாக கோபால்சாமி அய்யங்கார், மாதவ்ராவ், சையதுமுகமது சாதுல்லா, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்ற மிகப்பெரிய சட்ட மேதைகள் எல்லாம் இடம் பெற்று இருந்தார்கள். இவர்களெல்லாம் ஒருங்கிணைந்து 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு, 165 நாட்கள் சபையின் கூட்டத்தை நடத்தி அதில் 114 நாட்கள் வரைவு அரசியல் சட்டம் தொடர்பாக முக்கிய வாதங்களுக்கும், திருத்த தீர்மானங்களுக்கும் செலவிட்டனர்.
மொத்தம் 7635 திருத்த தீர்மானங்கள் தாக்கல் செய்து, அவற்றுள் 2473 தீர்மானங்கள் விவாதித்து பைசல் செய்யப்பட்டன. பிரிட்டனில் நடைமுறையில் உள்ள அரசியல் சட்டத்தை அடிப்படையாக வைத்து, நம் பாரத தேசத்திற்கு அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள அரசியல் சட்டங்களில் சில நம் தேவைக்கேற்ப சேர்க்கப்பட்டன. இப்படி அம்பேத்கரும், அவரது குழுவும் அயராத உழைப்பால், இந்தியாவினுடைய அரசியல் சாசனத்தை எழுதிமுடித்தார்கள்.
1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள், நம் இந்தியப் பாராளுமன்றத்தில், தாம் தயாரித்து எழுதப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை, ஆங்கிலத்திலும் இந்தியிலுமாக இரண்டையும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் தாக்கல் செய்தார். தாக்கல் செய்து விட்டு கணத்த இதயத்தோடு அவர் உரையாற்றியது இன்று நாம் நினைத்தால் கூட நம் இதயம் கணத்துப்போகும். அவர் என்ன உரை நிகழத்தினார் தெரியுமா?
“ On the 26th of January 1950, we are going to enter into a life of contradictions. In politics we will have equality and in social and economic life we will have inequality.
In politics we will be recognizing the principle of one man one vote and one vote one value.
In our social and economic life, we shall, by reason of our social and economic structure, continue to deny the principle of one man one value.
How long shall we continue to live this life of contradictions?
How long shall we continue to deny equality in our social and economic life?
If we continue to deny it for long,………….
we will do so
only by putting our political democracy in peril…………..
We must remove this contradiction at the earliest possible moment or-else
those who suffer from inequality will blow up the structure of political democracy
which this Assembly has so laboriously built up.”
“சுதந்திர இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி 1950 ஜனவரி 26 இல், நாமெல்லாம் ஒரு முரண்பாடான வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப்போகிறோம். அது என்ன முரண்பாடான வாழ்க்கை என்று கேட்கிறீர்களா? அரசியலில் சமத்துவத்தைக் கொண்டு வந்து விட்டு, சமூகப் பொருளாதார வாழ்வில் சமத்துவமற்ற நிலையைத்தான் நாம் மேற்கொள்ள இருக்கிறோம். அரசியலில் ஒரு மனிதனுக்கு “ஒரு வாக்கு – ஒரு மதிப்பு” என்ற நிலையை உருவாக்கிவிட்டோம். ஆனால் அதே மனிதனுடைய சமூகப் பொருளாதார வாழ்வில் “ஒரு மனிதன் – ஒரு மதிப்பு” என்ற நிலையை தொடந்து மறுத்துக்கொண்டே இருக்கப்போகிறோம்.” என்றார்.
இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சியால் மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சி ஏற்படும் என்று முடிவு செய்து, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதையொட்டி 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் தாய்நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களையும், நம் மண்ணுக்காக உயிர் நீத்த தியாகிகளையும் நினைவு கூறும் வகையில், ஜனவரி 26-ம் தேதியன்று தேசிய விடுமுறை அளிக்கப்பட்டு, நாடு முழுவதிலும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடப்பட்டு கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா ஒரு குடியரசாக மாறிய நாள், இந்த தேசத்தின் வாழ்வில், இந்த தேசத்தில் உள்ள மக்களின் வாழ்வில் மிக மிக முக்கியமான ஒரு நாளாகும்.
இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமைக் கொள்கிறோம் எனில், அதன் பின்னணியில் லட்சக்கணக்கான தியாகிகளின் தன்னலமற்ற சேவை இருக்கிறது. அவர்களின் ஆன்ம பலம் இணைந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது. சுமார் நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறோம். தலைமுறை தலைமுறையாக இந்த ஒற்றுமைக்காக தன்னலமின்றி பாடுபட்டு தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து இருக்கிறார்கள் சுதந்திர போராட்ட வீரர்கள். அவர்களின் கனவை இன்று நாம் நினைவாக்கியிருக்கிறோமா? அவர்களது தியாகத்தையும் உழைப்பையும் நாம் சரியாக பயன்படுத்தியுள்ளோமா? கேள்விக்குரியதாகவும் கேலிக்குரியதாகவும் இன்றைய சமூக அரசியல் இருந்தாலும், இதை மாற்றவும் ஏற்றத் தாழ்வுகளை, சாதி மதப் பிரிவினைகளை களைந்து புதியதொரு சமுதாயத்திற்கான கனவுகளைக் காணும் ஒருசில புண்ணிய ஆத்மாக்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களின் வழிகாட்டுதலால் உலகின் பிரச்னையை மட்டுமல்லாமல் நம்முடைய நிலவி வரும் பிரிவினைகளைத் தவிர்த்து ஒட்டுமொத்த மானுடத்தின் வளர்ச்சிக்கான பாதைக்கு திரும்ப முடியும். அது சாத்தியமானால் உலகம் முழுவதுமே தங்களது நலனுக்கு இந்தியாவை நோக்கி வர விரும்பும்.
இந்தியாவின் பெருமைகளைப் பற்றிக் கூற பல விஷயங்கள் இருந்தாலும் இன்று மேற்குலகம் மொத்தமும் நம்மைத் திரும்பிப் பார்க்கச் செய்வது இந்தியாவின் ஆன்மிகத்தன்மை எனலாம். நம்முடைய நாட்டை நோக்கி காலந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வருகை புரியக் காரணம் அவர்கள் எங்கு தேடினாலும் கிடைக்காத அமைதி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கான வேர் நமது புண்ணிய பூமியில்தான் உள்ளது. இதை அவர்கள் ஆய்வுகள் மூலமாகவும் நேரடி அனுபவம் மூலமாகவும் உணர்ந்துள்ளார்கள்.
இந்தியா ஆன்மிகத்தை ஆதாரமாக வாழ்வியலைக் கொண்டுள்ள நாடு. நம்முடைய எளிய வாழ்க்கையின் அடிப்படை பண்பை விட்டுக்கொடுக்காமல் நாம் எப்போதும் பராமரித்து வருவதால் நம்முடைய கலாச்சாரம் உலகிற்கே எடுத்துக்காட்டாய் திகழ்கிறது. இதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளலாம். ஒரு மாபெரும் தேசமாக இந்த பரந்துபட்ட உலகின் முன் தலைநிமிர்ந்து நாம் நிற்கிறோம். உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் வன்முறை, விழிப்புணர்வு அற்ற நிலை இவையெல்லாம் இங்கும் நிலவினாலும், ஒட்டுமொத்தமாக நமது வேரினை நாம் இழந்துவிடவில்லை. எல்லாவிதமான கேள்விக்கும் பதில் நம்மிடம் உள்ளது, குழப்பத்திற்கு தீர்வு இங்குதான் உள்ளது. அதை நாம் முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது இங்குள்ள அரசியல்வாதிகளின் கனவு எனலாம். ஆனால் அது நல்லரசாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் கனவாகும். நல்லரசாக மட்டுமல்லாமல் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும் விதமாக, சமூக வேறுபாடுகள் அற்ற மக்களாட்சி உண்மையிலேயே ஏற்பட வேண்டும்.
இனி வரும் காலங்களில், மக்களின் வறுமையைப் போக்குவதில் நம் தேசம் பாடுபட வேண்டும் மிகப் பெரும் மக்கள் திறனைக் கொண்டு, வாழ்க்கையை இப்போதிருக்கும் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அது நம் கண் முன்னேதான் உள்ளது. நிச்சயம் ஒவ்வொருவரும் மனது வைத்தால் நம்மால் நல்ல மாற்றங்களை நிகிழ்த்த முடியும். ஒரு தேசமாக நாம் ஒற்றுமையோடும், விழிப்போடும், கவனத்தோடும் செயல்பட்டால் இக்கனவு ஈடேறும். நல்லதே நினைத்து நல்லதே செயல்படுத்தினால், வானம் கூட வசப்படும்.
ஜெய்ஹிந்த்…..!
“திருக்குறள் இளம் புலமையர்”
கே.பி. ரோகித்கணேஷ்
(சொற்பொழிவாளர், கட்டுரையாளர் )
145, மின்னப்பன் தெரு,
உறையூர், திருச்சி – 620003
அலைபேசி : 9894969558

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..