July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஏரிக்கரையில் தீப்பற்றி எரிந்த மருத்துவக் கழிவுகள்: புகை மண்டலத்தால் போச்சம்பள்ளி பகுதியில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூச்சுத்திணறல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குச் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் ஆபத்தான மருத்துவக் கழிவுகள் நாள்தோறும் அருகில் உள்ள ஜம்பு ஏரிக்கரை ஓரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று மாலை ஏரிக்கரையில் குவிக்கப்பட்டிருந்த கழிவுகளில் திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதிலிருந்து வெளியேறிய அடர்ந்த நச்சுப் புகை, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் பிரதான சாலையில் பனி போல் அடர்த்தியாகப் படர்ந்தது.

சாலையைச் சூழ்ந்த நச்சுப் புகையால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளுக்கும் நடந்து சென்ற பொதுமக்களுக்கும் கடுமையான கண் எரிச்சலும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மேலும், புகை மண்டலத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாமல் ஓட்டுநர்கள் நிலைதடுமாறி பெரும் அவதிக்குள்ளாகினர்.

ஏரிக்கரை ஓரத்தில் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கக் கோரி, கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் ஆதங்கத்துடன் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, ஆபத்தான கழிவுகள் மற்றும் குபைகளை கொட்டப்படுவதை உடனடியாகத் தடுத்து, பொதுமக்களின் சுகாதாரத்தையும் நீர்நிலையையும் பாதுகாக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.