April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மறைந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ₹24.83 லட்சம் நிதியுதவி: 2009 பேட்ச் காவலர்களின் நெகிழ்ச்சி நடவடிக்கை!

கிருஷ்ணகிரி, மார்ச். 29:
தமிழக காவல்துறையில் 2009-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் “உதவும் அன்பு உள்ளங்கள்” குழு சார்பில், உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு சுமார் 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
தமிழக காவல்துறையில் கடந்த 2009-ஆம் ஆண்டு பணி நியமனம் பெற்ற காவலர்கள், பணியின் போது எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் சக நண்பர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் “2009 பேட்ச் காவல்துறை உதவும் அன்பு உள்ளங்கள்” என்ற அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர்.கலைவாணி அவர்கள், கடந்த 28/10/2025 அன்று பணியில் இருந்தபோது காலமானார். அவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இக்குழுவின் உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் நிதி திரட்டினர்.
அதன் மூலம் திரட்டப்பட்ட ₹24,83,894 (இருபத்தி நான்கு லட்சத்து எண்பத்தி மூவாயிரத்து எண்ணூற்று தொண்ணூற்று நான்கு ரூபாய்) நிதியுதவித் தொகை, இன்று (29/03/2026) மறைந்த காவலர் கலைவாணியின் குடும்பத்தினரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
இக்குழுவினர் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிதி திரட்டி, இதுவரை பணியின் போது உயிரிழந்த 43 காவலர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் ₹10,32,94,705 (பத்து கோடியே முப்பத்தி இரண்டு லட்சத்து தொன்னூற்று நான்காயிரத்து எழுநூற்று ஐந்து ரூபாய்) நிதியுதவியாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு வழங்கும் சலுகைகளுக்குக் காத்திருக்காமல், சக பணியாளர்களே ஒன்றிணைந்து ஒரு பெரிய தொகையைத் திரட்டித் தருவது காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

செய்தியாளர் முபாரக் 8428723357

Facebook
YouTube
Instagram
WhatsApp