தந்தை, மகள் பலி; தாய்-மகன் சிகிச்சை
மத்தூர், ஜூன் 28:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரிசி ஏற்றி வந்த லாரி, கார் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் அவரது 15 வயது மகள் உயிரிழந்தனர்.
கோவில் தரிசனம் முடிந்து திரும்பியபோது துயரம்:



நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம், பாப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன் (43). இவர் பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராகப் பணியாற்றி வந்தார். இவர் மனைவி கார்த்திகா (35), மகள் அஸ்விகா (15), மகன் ஸ்ரீவந்த் (8) ஆகியோருடன் பெங்களூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில், குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் பெங்களூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மத்தூர் அருகே சோனாரஅள்ளி பகுதியில் கார் வந்தபோது, கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லாரி, அவர்கள் பயணித்த கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் படுகாயமடைந்தனர். இதில் மகள் அஸ்விகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மோகன், கார்த்திகா மற்றும் ஸ்ரீவந்ததை அப்பகுதி மக்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார்த்திகா மற்றும் ஸ்ரீவந்த் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த மோகன் மற்றும் அஸ்விகாவின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு
ஹவுராவிலிருந்து வந்த