August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் G.நேரு (எ) குப்புசாமி MLA தலைமையில் ரூ.29.49 லட்சம் மதிப்பில் உப்பனாறு மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி பூமி பூஜையுடன் தொடக்கம்!

புதுச்சேரி, ஆக. 21:

வரும் மழைக்காலத்தை முன்னிட்டு உருளையன்பேட்டை தொகுதி முழுவதும் உள்ள கிளை வாய்க்கால்களை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உருளையன்பேட்டை தொகுதியிலிருந்து வெளியேறும் மழைநீர் உப்பனாறு பிரதான மழைநீர் வடிகால் வாய்க்கால் வழியாக கடலில் கலக்கிறது. இந்நிலையில், உப்பனாறு வாய்க்காலில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள அடைப்புகள், சேரும் சகதி மற்றும் புதர் மண்டியுள்ள பகுதிகளால் மழைநீர் தேங்கி, குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களின் உடைமைகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் நிலை இருந்து வந்தது.

இதனைத் தவிர்க்கும் வகையில், உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நேயம் மக்கள் கழகத் தலைவருமான G.நேரு (எ) குப்புசாமி MLA, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரை சந்தித்து, உப்பனாறு பிரதான மழைநீர் வடிகால் வாய்க்காலை முழுமையாக தூர்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை நீர்ப்பாசனக் கோட்டப் பிரிவு சார்பில் ரூ.29 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் உப்பனாறு பிரதான மழைநீர் வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் தொடக்கமாக, இன்று (21.08.2026) காலை 9 மணியளவில் மறைமலை அடிகள் சாலை பெட்ரோல் பங்க் அருகே G.நேரு (எ) குப்புசாமி MLA தலைமையில் பூமி பூஜை செய்து தூர்வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

இந்தப் பணிகள் காமராஜர் சாலை முதல் மறைமலை அடிகள் சாலை வரையிலான இடைப்பட்ட பகுதியில், ஓராண்டு காலத்திற்கு தூர்வாரி சுத்தப்படுத்தி பராமரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ளன.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்புப் பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவிப் பொறியாளர் லூயிபிரகாசம் நிக்கோ, இளநிலைப் பொறியாளர் கணேசன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், அப்பகுதியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் நேயம் மக்கள் கழக நிர்வாகிகள், பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.