April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலத்தில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வெள்ளி கிரீடம் திருடியவனை வெளுத்தெடுத்த போலீஸ்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மன் தலையில் அணியப்பட்டிருந்த வெள்ளி கிரீடத்தை திருடிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மக்கள் நடமாட்டம் இல்லாத நேரம், கிரீடத்தை நேக்காக திருடியவர், சிசிடிவியால் சிக்கியதன் பின்னணி என்ன?

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சீலியம்பட்டி அம்மன் கோயிலில், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கிரீடத்தை மர்ம நபர் ஒருவர் நேக்காக கொள்ளையடித்துச் சென்றுள்ளார். மறுநாள் வழக்கம்போல கோயிலைத் திறந்த பூசாரி, அம்மனின் வெள்ளி கிரீடம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, கோயில் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ய, மர்ம நபரின் திருட்டு வேலை தெள்ளத் தெளிவாகப் பதிவாகி இருந்தது.

இது குறித்து கோவில் நிர்வாகம், மல்லியகரை காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்க வழக்குப் பதிவு செய்த போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். சிசிடிவியில் பதிவான கொள்ளையனின் முகத்தை வைத்து விசாரிக்க, அதில் ஆத்தூர் உடையார்பாளையத்தைச் சேர்ந்த வாசு என்பவர் வசமாகச் சிக்கினார். மே பேகுனா சாப் பாணியில், நல்லவர் போல நடித்தவரை சிறப்பாக கவனித்து, உண்மையைக் கக்க வைத்துள்ளனர்.

கோயில்களில் உள்ள சுவாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருவதாகவும், செலவுக்குப் பணம் இல்லாததால் கோயிலில் உள்ள அம்மன் தலையில் வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கிரீடத்தைத் திருடியதாகவும் வாசு ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து வாசு மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அடகு வைக்கப்பட்ட அம்மன் கிரீடத்தை மீட்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். ஊரே உறங்கும் நேரம் மெகா கொள்ளையில் ஈடுபட்ட கேடி திருடன், போலீஸில் சிக்கியிருப்பதால் சீலியம்பட்டி கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp