February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

​புதுச்சேரி: 12-வது நாளாக தொடரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டம் – பிச்சை எடுத்து நூதன முறையில் எதிர்ப்பு!

​புதுச்சேரி:

புதுச்சேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டியுள்ளது. போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஊழியர்கள் இன்று அரை நிர்வாணமாக பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தனர்.

​கடந்த பிப்ரவரி 12-ம் தேதி முதல் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் பணியாற்றும் 108 அவசர ஊர்தி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது முக்கிய கோரிக்கைகள் வருமாறு:

கடந்த ஆண்டு புதுச்சேரி முதல்வர் அறிவித்த ₹10,000 ஊதிய உயர்வு தொடர்பான அரசாணை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2020-ம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய போனஸ், வருடாந்திர ஊதிய உயர்வு (Increment) மற்றும் இதர சலுகைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டுள்ளன.

பி.சி.பி.வி (PCPV) திட்டத்தின் கீழ் பணியாற்றும் மற்ற பணியாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் நிலையில், ஓட்டுநர்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது சட்டத்திற்கு விரோதமானது என ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​கடந்த 10 நாட்களாக சுகாதாரத் துறை அலுவலகம் முன்பாக முழக்கங்களை எழுப்பி போராடி வந்த ஊழியர்கள், இன்று 12-வது நாளில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிர்வாணமாக பிச்சை எடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர். “வாழ்வாதாரத்திற்காக வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்துள்ளோம்” என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

​தொடர்ந்து 12 நாட்களாக ஊழியர்கள் பணிய புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், புதுச்சேரி மாநிலம் முழுவதும் அவசர ஊர்தி சேவைகள் கடுமையாக முடங்கியுள்ளன.

​அவசர காலங்களில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
​கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

சுகாதாரத் துறை அதிகாரிகள் இதுவரை சுமூகமான தீர்வு காண முன்வராததால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என ஊழியர் சங்கத்தினர் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp