76 வது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் கே.எம்.சி சட்டக் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி -15.11.2025
76வது இந்திய அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் வகையில், திருப்பூரில் உள்ள கே.எம்.சி சட்டக் கல்லூரி இன்று அரசியலமைப்பு தின விழா மற்றும் விழிப்புணர்வு மாணவ பேரணியை நடத்தியது. வரலாற்று சிறப்புமிக்க தியாகி திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி N சதீஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் 300-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் முக்கிய சாலைகளின் வழியாக சென்று திருப்பூர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பேரணி சீரான முறையில் அமைதியாக நடந்து முடிந்தது. KMC சட்டக் கல்லூரியின் தாளாளர் மற்றும் தனியார் சட்டக் கல்லூரி கூட்டமைப்பின் துணை தலைவருமான அருணா ஸ்ரீதேவி, கே.எம்.சி வள்ளியம்மை கல்வி அறக்கட்டளையின் தலைவி திருமதி லோகநாயகி, KMC சட்டக் கல்லூரியின் முதல்வர் எம்.எஸ். சௌந்தரபாண்டியன், செயலாளர் ஞான வர்ஷினி, செயல் அலுவலர் சசிகாந்த் பங்கேற்றனர்.
பேரணியின் தொடர்ச்சியாக, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எம்.எஸ். சௌந்தரபாண்டியன் அவர்கள் வரவேற்புரையாற்றி அனைவரையும் வரவேற்றார்.
அரசியலமைப்பு தின உரையில், உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு. திரு. N. சதீஷ்குமார், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பை எடுத்துரைத்து, உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு இடையிலான சமநிலையை வலியுறுத்தினார். சரத்து 32 ஐ அரசியலமைப்பின் “இதயம் மற்றும் ஆன்மா” என்று அழைத்தார். சேகூர் யானை வழித்தட தீர்ப்பை மேற்கோள் காட்டி, அரசியலமைப்பு சரத்து 51A(g) இன் கீழ் நீதிமன்றம் தன் அணுகுமுறையை சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கி செல்வதை கோடிட்டுக் காட்டினார். அரசியலமைப்பை ஒரு உயிருள்ள ஆவணமாகக் கருதி சட்ட மாணவர்கள் தங்கள் வாழ்வில் அரசியலமைப்பு மதிப்பீடுகளை பின்பற்றுமாறு வலியுறுத்தினார். அரசியலமைப்பு தின விழா போட்டிகளாக வினாடி வினா மற்றும் விவாதப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே விழா நிறைவடைந்தது.
கே.எம்.சி சட்டக் கல்லூரி

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!