April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,08/03/2026.

சேலம் அரசியலில் புதிய திருப்பம் – திமுகவில் அமைச்சர் ராஜேந்திரனுக்கு எதிராக கிளம்பிய சீனியர்கள்.

மாம்பழ மாவட்டமான சேலத்தில் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில்,அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. சேலம் வடக்கு தொகுதியை தொடர்ந்து கைப்பற்றி தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள ராஜேந்திரன்,அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால்,கடந்த காலங்களில் கட்சிக்காக இணைந்து செயல்பட்ட முக்கிய நிர்வாகிகளை தற்போது அவர் புறக்கணித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக,முன்னாள் நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர்,தங்களை திட்டமிட்டே ஓரங்கட்டப்படுவதாக அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

2011,2016,2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் சேலம் மாவட்டத்தில் கட்சி வலுவாக நிலைத்திருந்தது.அதில் சேலம் வடக்கு தொகுதியில் ராஜேந்திரன் தொடர்ந்து வெற்றி பெற்றார்.அவர் முன்பு பனமரத்துப்பட்டி தொகுதியிலிருந்து சேலம் வடக்கு தொகுதிக்கு மாறியதும், அப்பகுதியில் வலுவான எதிர்க்கட்சித் தலைவர்களை எதிர்கொள்ளும் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது, அவருக்கு ஆதரவாக இருந்த சில முக்கிய நிர்வாகிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.வரவிருக்கும் 2026 தேர்தலில் யார் வேட்பாளராக நிற்பார்கள் என்ற விவகாரமும் உட்கட்சிப் போட்டியை அதிகரித்துள்ளது.

சேலம் வடக்கு தொகுதியில் வன்னியர், ஆதிதிராவிடர்,சிறுபான்மை சமூகங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போன்ற பல்வேறு வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கடந்த தேர்தல்களில் சில பகுதிகள் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும்,அந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகளின் அதிருப்தி அடுத்த தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் சில மூத்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து கட்சி தலைமையை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில்,கட்சியின் வெற்றிக்காக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்ற கருத்தும் மற்றொரு தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில்,உட்கட்சிப் பிளவு தீருமா? அல்லது அடுத்த தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா?என்பது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்படும் முக்கிய அம்சமாக உள்ளது.

Facebook
YouTube
Instagram
WhatsApp