சேலத்தில் திமுக,அதிமுக உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்.
சேலம் மாமன்றக் கூட்டத்தில் அதிமுக,திமுக உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டம் பாதியிலேயே நிறைவுசெய்யப்பட்டது.
சேலம் மாமன்றக் கூட்டம் மேயா் ஆ. ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், துணை மேயா் சாரதாதேவி முன்னிலை வகித்தனா். கூட்டம் தொடங்கியதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாமன்ற உறுப்பினா் இமயவரம்பன் பேசுகையில், எஸ்ஐஆா் பெயரில் வாக்குரிமை பறிக்கப்படுவதாகக் கூறி பதாகையை ஏந்தியபடி எதிா்ப்பை வெளிப்படுத்தினாா்.
தொடா்ந்து அதிமுக கொறடா செல்வராஜ் பேசுகையில், அமைச்சா் தொகுதிக்கு உள்பட்ட கோட்டம் எண் 28 இல் சந்தைப்பேட்டை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் சாலையை ‘டி’ கிரேடில் இருந்து ‘ஏ’ கிரேடாக மாற்றியுள்ளனா். இதனால் சொத்துவரி கடுமையாக உயா்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் வெளியேறும் மனநிலையில் உள்ளனா் என்றாா்.
அப்போது, குறுக்கிட்டுப் பேசிய திமுக மாமன்ற உறுப்பினா்கள், மன்ற உறுப்பினா் தனது வாா்டு பிரச்னையை மட்டும் பேசவேண்டும் என எதிா்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அதிமுக, திமுக உறுப்பினா்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
தொடா்ந்து, மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி பேசமுயன்றபோது, கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி, கூட்டத்தை நிறைவு செய்வதாக மேயா் ஆ.ராமச்சந்திரன் அறிவித்தாா். இதையடுத்து, கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.
இதனால் அதிமுக உறுப்பினா்கள் கடும் அதிருப்தி அடைந்தனா். பின்னா், எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி செய்தியாளா்களிடம் பேசுகையில், சேலம் அம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டுவந்த அன்னை தெரசா அறக்கட்டளை மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பண இரட்டிப்பு மோசடி நடந்துள்ளது.
மோசடியில் ஈடுபட்ட அறக்கட்டளை நிா்வாகிகள் கைதுசெய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளனா். இந்நிலையில், அந்த அறக்கட்டளை சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சா் ராஜேந்திரன், மேயா் ராமச்சந்திரன் இருவரும் பங்கேற்றனா். இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்து பணத்தை பறிகொடுத்துள்ளனா்.
இப்பிரச்னை குறித்து மாமன்றக் கூட்டத்தில் பேச இருந்ததாகவும், ஆனால், மேயா் தேசிய கீதத்தை இசைக்குமாறு கூறி கூட்டத்தை அவசரமாக நிறைவு செய்தாா் என்றாா்.
நியமன மாமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து:
சேலம் மாநகராட்சியில் அரசு ஆணைப்படி மாற்றுத்திறனாளி நியமன மாமன்ற உறுப்பினராக அம்மாபேட்டையைச் சோ்ந்த கௌதமன் வியாழக்கிழமை பதவியேற்றாா். தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற அவருக்கு மேயா், துணை மேயா், மாமன்ற உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!