June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செங்கோட்டையனுடன் தவெக பக்கம் தாவிய சேலம் மாவட்டத்தின் முக்கிய பாஜக நிர்வாகி.

அதிர்ந்த கமலாலயம்.

தவெகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த போது, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பாஜக நிர்வாகியும் ஐக்கியமாகி இருப்பது கமலாலயத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜகவின் மாநில கூட்டுறவு பிரிவு மாநிலத் தலைவராக இருந்த வெங்கடாச்சலம், திடீரென தவெகவில் இணைந்திருக்கிறார். இது அவருடன் இருந்தவர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்திருக்கிறது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருடன் இணைந்து ஒரு மாதமாக பணியாற்றி வந்தார். இதனிடையே திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய்யுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதன்பின் நேற்று காலை பனையூர் தவெக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.

செங்கோட்டையன், முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியமானார். அனைவரையும் தவெக துண்டு அணிவித்து விஜய் வரவேற்றார். இதனிடையே தவெகவில் இணைந்தவர்களின் பட்டியல் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகி ஒருவரின் பெயர் இருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் தெற்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம். இவர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி காரணமாக அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதன்பின் தமிழக பாஜகவில் அவருக்கு கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் பதவி அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மாநில செயற் குழு உறுப்பினராகவும் வெங்கடாசலம் இருந்திருக்கிறார்.

இப்படியான சூழலில் வெங்கடாசலம் திடீரென செங்கோட்டையனுடன் சேர்ந்து தவெகவில் ஐக்கியமாகி இருக்கிறார். இது சேலம் மாவட்ட பாஜக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தவெகவில் இணையப் போகிறேன் என்பதை தன்னுடைய ஆதரவாளர்களுக்கே வெங்கடாசலம் கூறவில்லையாம். கட்சிப் பதவியை கூட ராஜினாமா செய்யாமல் தவெகவில் இணைந்திருக்கிறார்.

இதுதொடர்பாக சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார் பேசுகையில், முன்னாள் எம்எல்ஏ என்பதால் வெங்கடாசலத்தை அனைவரும் மரியாதையோடு நடத்தினர். ஆனால் எங்களுக்கே தெரியாமல் செங்கோட்டையனுடன் சென்று விஜய் கட்சியில் இணைந்துள்ளார் என்று புலம்பி இருக்கிறார். அதேபோல் வெங்கடாசலம் ஏற்கனவே அதிமுக, தேமுதிக, பாஜக என்று பல்வேறு கட்சிகளுக்கும் மாறிக் கொண்டே இருப்பார். இதனால் விஜய் கட்சியில் இணைந்தது பெரிய ஆச்சரியம் இல்லை என்று அவருடன் பயணித்தவர்கள் கூறி வருகின்றனர்.