April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

20 ஆண்டுகாலமாக இருட்டில் வாழும் ஈரோடு மேற்குத் தொகுதி ஆர். என். புதூர் பகுதி பொதுமக்கள்…

ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை வீசி எறிந்து தேர்தல் புறக்கணிப்பு என அறிவிப்பு..

ஈரோடு. மார்ச். 17

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 20 ஆண்டு காலமாக தங்களுடைய வீடுகளுக்கு மின்சார இணைப்பு தரப்படவில்லை என்றும் குடிநீர் வசதிகள் இல்லை என்றும் குற்றம் சாட்டி அப்பகுதி பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து, வாக்காளர் அடையாள அட்டைகளை ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் தூக்கி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர், அமைச்சர் சு. முத்துசாமியின் தொகுதியான ஆர். என் புதூர் பகுதியைச் சேர்ந்த சூரியம்பாளையம் கிராமம் புல எண் 168 ல் வசிக்கக்கூடிய பட்டியல இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இதுவரை கடந்த 20 ஆண்டு காலமாக அந்த நிலத்திற்குரிய பட்டா வழங்கப்படாமல் இருப்பதாகவும், பட்டா இல்லாத காரணத்தினால் மின்வாரியம் சம்பந்தப்பட்ட அந்த பகுதிக்கு மின் இணைப்பு வழங்காமல் இருப்பதாகவும், மேலும் இதன் காரணமாக குடிநீர் இணைப்பு இல்லாமலும் அப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகாலமாக மிகவும் கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு சொல்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் அந்த பகுதிக்கு வந்து இங்குள்ள குறைகளை உடனடியாக நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்று சொல்லி எங்களுடைய ஓட்டுக்களை வாங்கி செல்கிறார்களோ தவிர, அதன் பிறகு இந்த பக்கம் எட்டிப் பார்ப்பது கூட இல்லை என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் பலமாக வைத்துள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட அந்தப் பகுதி ஈரோடு மேற்கு தொகுதியில் வருகிறது. மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர், அமைச்சர் முத்துசாமி. இவரிடமும் பல மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடமும் கடந்த சுமார் 20 ஆண்டு காலமாக இந்த முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தும் இதுவரை அதிகாரிகளோ அரசியல் கட்சித் தலைவர்களோ எங்களுக்கு எந்த ஒரு உதவியும், எங்களது நியாயமான கோரிக்கையையும் ஏற்று அதற்குரிய தீர்வை இந்த நாள் வரை தரவில்லை. என்று ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட வந்திருந்த, ஈரோடு மேற்கு தொகுதி ஆர் என் புதூர் அன்னை தெரேசா காலனி பொது மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் மின்சார வசதி இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வந்து செல்வது தெரியவில்லை என்றும், கோடை வெயில் கொளுத்த தொடங்கி உள்ள நிலையில் மிகவும் கஷ்டமாக உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மேலும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து கண்ணீர் மல்க தெரிவித்ததோடு, கடந்த 20 ஆண்டுகாலமாக மின் இணைப்பு இல்லாமல் லாந்தர் வெளிச்சத்தில் வாழ்ந்து வருகிறோம் என லாந்தர் மற்றும் சிம்னி விளக்குகளை எடுத்து செய்தியாளர்களும் காட்டினர்.

அதன் பிறகு கோபமடைந்த அந்த பொதுமக்கள் இந்தத் தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறி தங்கள் கையில் வைத்திருந்த அவர்களது வாக்காளர் அடையாள அட்டையை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூக்கி எறிந்தனர்.

இந்த சம்பவம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Facebook
YouTube
Instagram
WhatsApp