February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,07/02/2026.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் என் ஊர் என் கனவு திட்டம் தயாரிப்பது குறித்து கலந்தாய்வு.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த என் ஊர் என் கனவு திட்டம் தயாரிப்பது குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்,”என் ஊர் என் கனவு திட்டம்” (இலக்கு 2030 உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் தயாரித்தல்) தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். இதில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து சங்க பிரதிநிதிகள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவனத்தார், வணிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு, பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: “என் ஊர் என் கனவு திட்டம்” என்பது தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் ஒரு சிறப்பான திட்டமாகும். இத்திட்டம் சேலம் மாவட்டத்தில் சிறந்த கட்டமைப்பை உருவாக்கிடவும், தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டவும் உருவாக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட முன்னேற்றத்திற்கு 2030ம் ஆண்டை இலக்காக செயல்படுத்த வேண்டிய உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் தயாரிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தை உருவாக்குவதற்காக நடந்த கலந்தாய்வில், பல்வேறு துறைகளை சேர்ந்த சங்க பிரதிநிதிகள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவனத்தார், வணிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள், துறைசார் வல்லுநர்கள், அரசு சாரா நிறுவனங்கள், சமூக அக்கறை கொண்ட தனிநபர்கள், தொழிலதிபர்கள், பொது நலனில் அக்கறை கொண்ட பிற பங்குதாரர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் குறித்த கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இக்கூட்டத்தில், கலந்துகொள்ள இயலாத, தொலைநோக்கு திட்டங்களை கொண்ட தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களின் கருத்துக்களை pag.slm@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக எழுத்துப்பபூர்வமாக இன்று (6ம் தேதி) மாலைக்குள் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷாலினி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஜானகி, அஸ்தம்பட்டி மண்டல குழுத்தலைவர் உமாராணி, மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் பிரசன்னா பாலமுருகன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp