February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலத்தில் பரபரப்பு சம்பவம்.

பெண்ணின் கன்னத்தில் அறைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ.

சேலத்தில் அதிமுகவின் முன்னாள் எம்பியும்,அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவுமான அர்ஜூனன் சாலையில் சண்டையிட்டு பெண்ணின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஜூனன். இவர் திமுகவில் எம்பியாக இருந்தார். 1980ம் ஆண்டில் தர்மபுரி லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன்பிறகு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அணி சார்பில் 1989 ம் ஆண்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு 1991ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வீரபாண்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார்.

இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். டோல்கேட்டில் அவருக்கும், போலீசாருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தான் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமனேரி மற்றும் சின்னதிருப்பதி இடையே சாலை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. பல இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் அர்ஜூனனுக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு சாலை விரிவாக்கம் செய்ய அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேவேளையில் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் நிலத்துக்கு அருகே சாலை விரிவாக்கம் செய்யும்படி கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களுக்கும், அர்ஜூனனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அர்ஜூனன் தனது வேஷ்டியை மடித்து கட்டி ஆக்ரோஷமாக சென்று ஒரு பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் பெண்ணை எப்படி அடிக்கலாம்? என்று அவரிடம் வாக்குவாதம் செய்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. முன்னாள் எம்பி, எம்எல்ஏவான அர்ஜூனனுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp