வடமதுரை, ஜூன் 28:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தேர்வு நிலை பேரூராட்சியில், தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில் ஒருங்கிணைந்த தீவிர துப்புரவு பணி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடமதுரை பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த குப்பைகள் ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள் மூலம் அகற்றப்பட்டன.
இந்த துப்புரவு பணியை திண்டுக்கல் மாவட்ட வழங்கள் அலுவலர் பிரபாகரன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். பின்னர் வடமதுரை குளக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த துப்புரவு பணிகளை நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் வடமதுரை தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் பத்மலதா தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பேரூராட்சி உதவியாளர் அப்துல் கரீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும், குப்பைகள் அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் கழிவுகளை கொட்டக்கூடாது என்பதற்காக “இங்கு குப்பைகளை கொட்டாதீர்” என்ற விழிப்புணர்வு பலகைகள் நிறுவப்பட்டன. பொதுமக்கள் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, தூய்மைப்படுத்தப்பட்ட இடங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பலன் தரக்கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டன. மரங்களை பாதுகாத்து வளர்ப்பது அனைவரின் பொறுப்பு என்றும், தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்த ஒருங்கிணைந்த தீவிர துப்புரவு பணி முகாம் மூலம் வடமதுரை பேரூராட்சிப் பகுதிகளில் சுகாதாரமான மற்றும் பசுமையான சூழலை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இதனை வரவேற்று பாராட்டினர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!