June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை அருகே வெளுத்து வாங்கிய கனமழைவீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி – MLA ரா. கதிரவன் நேரில் ஆய்வு

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை திடீரென வானிலை மாறியது.

மாலை 5 மணியளவில் இடி, மின்னலுடன் சூறைக் காற்று வீசத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மணப்பாறை அடுத்த தவள வீரம்பட்டி பகுதியில் சுமார் 2 மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது.

பெய்த கனமழையால் தவள வீரம்பட்டி பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள அரசு பள்ளியில் தஞ்சம் புகுந்தனர். மழை தொடர்ந்து பெய்ததால் பள்ளி வளாகத்தையும் வெள்ள நீர் சூழ்ந்தது.

அதே நேரத்தில் தவள வீரம்பட்டி ஆற்றுப் படுகையில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் தீவு போல் காட்சி அளித்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் வெள்ள நீர் சூழ்ந்திருந்ததால் கிராம மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.

இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு. ரா. கதிரவன் உடனடியாக அரசு அதிகாரிகளுக்கும், தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கவும், வீடுகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை விரைந்து வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தவள வீரம்பட்டி பகுதிக்கு நேரில் சென்ற எம்எல்ஏ ரா. கதிரவன், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மழை வெள்ளம் புகுந்ததால் அரசு ஆவணங்கள் சேதமடைந்ததை பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று ஆவணங்கள் வழங்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கால்வாய் பகுதிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ, தண்ணீர் தேங்காத அளவிற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உரிய நேரத்தில் கட்சி நிர்வாகிகளை சம்பந்தப்பட்ட இடத்திற்கு அனுப்பி பல்வேறு உதவிகளை மேற்கொண்ட மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் அவர்களுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.